வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பு
வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கப்பட்டுள்ளதையடுத்து பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கப்பட்டுள்ளதையடுத்து பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வருகை அதிகரிப்பு
கோவை மாவட்டம் வால்பாறையில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இதனை கண்டுரசிக்க சுற்றுலா பயணிகள் அதிகஅளவில் வந்து செல்கிறார்கள். தற்போது வால்பாறையில் நிலவும் காலநிலையை அனுபவிக்க நாளுக்குநாள் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. இதனால் வனத்துறையினர், நகராட்சி நிர்வாகத்தினர் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள தொடங்கி விட்டனர். இதன் ஒரு பகுதியாக வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் சுற்றுலா தலங்களிலும், வியாபார ஸ்தலங்களில் பிளாஸ்டிக் சோதனை மேற்கொண்டு பறிமுதல் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வால்பாறை பகுதி மக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து மஞ்சள் பைகளை பயன்படுத்துங்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வீடு-வீடாக சென்று மஞ்சப்பை பயன்பாட்டை வலியுறுத்தி வீடுகளில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை ஒட்டி வருகின்றனர்.
தீவிர கண்காணிப்பு
தற்போது வால்பாறை பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் காலி மதுபாட்டில்கள் எடுக்கப்பட்டு உள்ளன. மேலும் பிளாஸ்டிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதனால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.இந்த நிலையில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்லக்கூடிய ஒரே வழித்தடம் தமிழக -கேரள எல்லையில் அமைந்துள்ள மளுக்கப்பாறை வழி மட்டுமே. கேரள மாநிலத்தில் இருந்து வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள், வால்பாறை பகுதியில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும்மளுக்கப்பாறை வழியாகத்தான் சென்றாக வேண்டும்.இதனால் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை கள இயக்குனர் உத்தரவின் பேரில் மானாம்பள்ளி வனச்சரகத்திற்குட்பட்ட மளுக்கப்பாறை வனத்துறை சோதனை சாவடியில் மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் மேற்பார்வையில் சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டுள்ள வனப் பணியாளர்கள் வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் வாகனங்களை முழுமையாக சோதனை செய்து அவர்கள் கொண்டுவரக் கூடிய பிளாஸ்டிக் பாட்டில்கள், காலி மது பாட்டில்களை பறிமுதல் செய்து விடுகின்றனர்.
எச்சரிக்கை
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் பாலு, மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் ஆகியோர் கூறியதாவது:- அரசின் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் மேற்கொண்டு வருகின்றோம். தங்கும் விடுதி, லாட்ஜ், காட்டேஜ்களில் தங்கவரக்கூடிய சுற்றுலா பயணகளுக்கு வால்பாறை பகுதியில் எங்கு சென்றாலும் பிளாஸ்டிக் பயன்படுத்தாதீர்கள் என்று எச்சரிக்கை செய்யுங்கள், பொது இடங்களிலும் வனப்பகுதியை ஒட்டிய இடங்களிலும் வாகனங்களை நிறுத்தி மது அருந்த வேண்டாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.