வால்பாறை பகுதியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் திணறல்
வால்பாறை பகுதியில் சுற்றுலா பயணிகள் வருகை நேற்று அதிகரித்தது. இதனால் ஏற்பட்ட வாகன போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் திணறினார்கள்.
வால்பாறை
வால்பாறை பகுதியில் சுற்றுலா பயணிகள் வருகை நேற்று அதிகரித்தது. இதனால் ஏற்பட்ட வாகன போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் திணறினார்கள்.
போக்குவரத்து ெநரிசல்
வால்பாறை பகுதியில் அரசு விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. இதனால் வால்பாறை மெயின் ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வால்பாறை பகுதி பொது மக்கள் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
வால்பாறை அருகில் உள்ள கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தொடர் அரசு விடுமுறை இருந்ததால் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வால்பாறை பகுதிக்கு வந்திருந்தனர். வால்பாறை பகுதியில் விட்டு விட்டு கனமழை பெய்து கொண்டே இருந்ததால் சுற்றுலா பயணிகள் எந்த ஒரு சுற்றுலா தலத்திற்கும் செல்ல முடியவில்லை.கூழாங்கல் ஆற்றிலும் அதிகளவில் தண்ணீர் சென்று வந்ததால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு நலன் கருதி போலீசார் சுற்றுலா பயணிகளை ஆற்றில் இறங்கி குளிக்க அனுமதிக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
வாகன ஓட்டிகள் கோரிக்கை
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் நேற்று வால்பாறையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். வால்பாறை பகுதியில் உள்ள எந்த ஒரு போலீஸ் நிலையத்திலும் போதிய போலீசார் இல்லாத நிலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாத நிலையே தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த நிலையில் அரசு விடுமுறை நாட்களில் வால்பாறை உட்கோட்ட போலீஸ் நிலையங்களான கோட்டூர், ஆனைமலை, ஆழியாறு போன்ற போலீஸ் நிலையங்களில் இருந்து கூடுதல் போலீசார் குறிப்பாக போக்குவரத்து போலீசாரை பணியில் அமர்த்தி போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று வால்பாறை பகுதி பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.