சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: குன்னூர் ரெயில் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் குன்னூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Update: 2022-11-22 18:45 GMT

குன்னூர்

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் குன்னூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

இயற்கை காட்சிகள் ரசிப்பு

நீலகிரி மாவட்டத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக நீலகிரி மலை ரெயில் உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த ரெயில் பாரம்பரிய சின்னமான யுனெஸ்கோ அந்தஸ்து பெற்றுள்ளது. இதன் காரணமாக மலை ரெயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளுர் மக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேட்டுப்பாளையம் -ஊட்டி மற்றும் ஊட்டி -மேட்டுப்பாளையம் இடையே தினசரி மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் பயணம் செய்யும்போது இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க வசதியாக மலைப்பாதையில் ரெயில் மெதுவாக இயக்கப்படுகிறது. இதன் காரணமாகவே மலை ரெயில்களில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமின்றி முன்பதிவில்லாபெட்டிகளிலும் நின்று கொண்டு பயணம் செய்ய பயணிகள் விரும்புகிறார்கள். மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு வரும் பயணிகள் ரெயில் மட்டுமின்றி குன்னூரிலிருந்து ஊட்டிக்கும், ஊட்டியிலிருந்து குன்னூருக்கும் 3 மலை ரெயில் டீசல் என்ஜின் மூலம் 5 பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது.

சுற்றுலா பயணிகள் வருகை

இந்த ரெயில்களில் ஆண்டுதோறும் பயணிகளின் கூட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையினால் தொடர் மழை பெய்து கொண்டு இருந்தது. இதனால் மாவட்டத்திலுள்ள சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து இருந்தது. இதன்காரணமாக மலை ரெயில்களிலும் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

தற்போது நீலகிரி மாவட்டத்தில் மழை நின்று பனிப்பொழிவு தொடங்கி உள்ளது. இதனால் மலை ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது. மேட்டுப்பாளையத்திலிருந்து வரும் மலை ரெயிலில் மட்டுமின்றி குன்னூரிலிருந்து ஊட்டி செல்லும் மலை ரெயில்களிலும் கூட்டம் அலைமோதியது. பயணிகள் குன்னூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் காத்திருந்து மலை ரெயிலில் ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையத்திற்கு செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்