சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வால்பாறை
வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுற்றுலா தலங்களில் கூட்டம்
வால்பாறையில் மார்கழி மாதத்தில் பகலில் கடுமையான வெப்பமும், இரவில் கடுங்குளிரும் நிலவுவது வழக்கம். இந்த காலநிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்வார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக டிசம்பர் மாதத்தில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை இல்லாமல் இருந்தது.
தற்போது கொரோனா பரவல் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இன்று(2023) புத்தாண்டு பிறந்ததையொட்டி அதை கொண்டாட வால்பாறைக்கு வருபவர்களின் எண்ணிக்கை நேற்று அதிகளவில் இருந்தது. அவர்கள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர். இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. மேலும் விடுதிகளில் தங்கி ஆட்டம், பாட்டத்துடன் புத்தாண்டு பண்டிகையை கொண்டாடினார்கள். இதனால் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது.
போக்குவரத்து நெரிசல்
இதற்கிடையில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. ஆனால் போலீசார் சார்பில் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் வாகனங்களில் வந்ததையொட்டி, போக்குவரத்தை சரி செய்ய போலீசார் போதிய அளவில் இல்லை.
இதன் காரணமாக வால்பாறை நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. மேலும் சுற்றுலா தலங்களில் அத்து மீறும் சுற்றுலா பயணிகளை கண்காணிக்கவும் போதிய போலீசார் பணியில் அமர்த்தப்படவில்லை. இது தவிர பல்வேறு மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை ஏற்பட்டுள்ளதால் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.