சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Update: 2023-09-09 16:50 GMT

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்தநிலையில் வாரவிடுமுறையையொட்டி நேற்று அதிகாலை முதலே ஏராளமானோர் சுற்றுலா வாகனங்கள், கார், வேன், மோட்டார் சைக்கிள்களில் கொடைக்கானலுக்கு வருகை தந்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதற்கிடையே ஒரேநேரத்தில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வாகனங்களில் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக ஏரிச்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். அதைத்தொடர்ந்து சுற்றுலா வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சுற்றுலா இடங்களுக்கு சென்றன.

கோக்கர்ஸ் வாக், மோயர் பாயிண்ட், குணா குகை, பில்லர்ராக், பைன்மரக்காடு, மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம், மதிகெட்டான் சோலை உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு சென்ற சுற்றுலா பயணிகள், அங்கு நிலவிய இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்தனர். மேலும் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்தும் உற்சாகம் அடைந்தனர். கொடைக்கானலில் நேற்று பகல் நேரத்தில் வெப்பம் நிலவியது. 2 வாரங்களுக்கு பிறகு வெயில் நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் சுற்றுலா இடங்களை பார்த்து பொழுதுபோக்கினர். 

Tags:    

மேலும் செய்திகள்