நெல்லையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு

நெல்லையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் இளநீர், குளிர்பானங்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-05-15 19:29 GMT

நெல்லையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் இளநீர், குளிர்பானங்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

உக்கிரம் காட்டும் அக்னி நட்சத்திரம்

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் சுட்டெரிப்பது வழக்கம். கடந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யாத நிலையில் பெரும்பாலான நீர்நிலைகள் தண்ணீரின்றி வறண்டு விட்டன. தற்போது அக்னி நட்சத்திர வெயிலும் உக்கிரம் காட்ட தொடங்கியதால், கோடை வெயில் தணலாக தகிக்கிறது. இதனால் பகலில் பொதுமக்கள் வெளியில் செல்லவே அச்சப்படுகின்றனர்.

இந்தாண்டு வழக்கத்தை விட அதிகளவு வெயில் வாட்டி வதைப்பதால் முதியவர்கள், குழந்தைகள் வெளியில் செல்லவே அச்சப்படுகின்றனர். கோடை விடுமுறை விடப்பட்ட நிலையிலும் பெரும்பாலான குழந்தைகள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். அத்தியாவசிய தேவைக்கும், பணிகளுக்காகவும் மட்டுமே பொதுமக்கள் பகலில் வெளியில் சென்று வருகின்றனர். இரவிலும் வெப்பத்தின் தாக்கம் குறையாததால், எத்தனை மின்விசிறிகள் இயக்கினாலும் தூக்கமின்றி தவிக்கின்றனர். சிலர் வீட்டின் முற்றத்திலும், மாடிகளிலும் தூங்குகின்றனர்.

நெல்லையில் 102.2 டிகிரி வெயில்

நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்திருந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. நேற்றும் கோடை வெயில் உக்கிரத்துடன் அடித்தது. இதனால் பகலில் சாலைகளில் கானல்நீராக காட்சியளித்தது.

நெல்லையில் நேற்று பகலில் வெயில் அளவு 102.2 டிகிரியாக பதிவாகி இருந்தது. தகிக்கும் வெயிலின் பிடியில் இருந்து தப்பிக்க பலரும் குளிர்பான கடைகளை நாடினர். மரங்கள் மிகுந்த பூங்காக்களிலும் தஞ்சம் அடைந்தனர். நெல்லை மாவட்ட அறிவியல் மையம், பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்கு குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர்.

குளிர்பான கடைகள்

கோடையையொட்டி நெல்லை டவுன், சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை மார்க்கெட், சமாதானபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையோர தள்ளுவண்டிகளில் குளிர்பான கடைகள் தொடங்கப்பட்டு உள்ளன. இங்கு இளநீர், பழச்சாறு, தர்ப்பூசணி ஜூஸ், பதநீர், நுங்கு போன்றவற்றின் விற்பனை அமோகமாக நடந்தது. அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களும், பாதசாரிகளும் சாலையோர கடைகளில் குளிர்பானம் அருந்தி இளைப்பாறி சென்றனர்.

கொக்கிரகுளம் மற்றும் பாளை வ.உ.சி. மைதான பகுதிகளில் ஏராளமான தற்காலிக குளிர்பான கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கும் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கம்பு, சோளம், ராகி கூழ் போன்றவற்றின் விற்பனையும் மும்முரமாக நடந்தது. பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்களும் நீர்மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினர்.

பழக்கடைகளிலும் வழக்கத்தை விட விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக திராட்சை, சாத்துக்குடி, எலுமிச்சை போன்றவற்றை பொதுமக்கள் அதிகளவு வாங்கி செல்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்