ரெயில் நிலையத்தில் மேற்கூரை வசதி இல்லாத இருசக்கர வாகன நிறுத்தம்அதிக கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் அதிருப்தி
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருசக்கர வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி போன்ற ரெயில் நிலையங்களுக்கு அடுத்தப்படியாக பெரிய ரெயில் நிலையமாகவும், முக்கிய சந்திப்பாகவும் விழுப்புரம் ரெயில் நிலையம் விளங்கி வருகிறது. இந்த ரெயில் நிலையம் வழியாக மொத்தம் 117 ரெயில்கள் சென்று வருகின்றன. இந்த ரெயில் நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் விழுப்புரம் ரெயில் நிலையம் எந்நேரமும் பரபரப்பாகவும், பயணிகள் கூட்டம் மிகுந்தும் காணப்படுகிறது.
இங்குள்ள ரெயில் நிலையத்தில் இருந்து திருச்சி, சென்னை, புதுச்சேரிக்கு ரெயில்கள் மூலம் நூற்றுக்கணக்கான பேர் வேலைக்கும், மருத்துவ வசதி போன்ற பல்வேறு பணிகளுக்காகவும் சென்று வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் வரும் அவர்கள் ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் கட்டணம் செலுத்தி பாதுகாப்பாக நிறுத்திவிட்டு செல்வது வழக்கம்.
மேற்கூரையே இல்லாத பார்க்கிங்
இவர்களின் வசதிக்காக ரெயில் நிலைய வளாகத்தில் இருசக்கர வாகன கட்டண நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இந்த வாகன நிறுத்துமிடம் மேற்கூரையின்றி திறந்தவெளியில் இருப்பதால் இருசக்கர வாகனங்கள் வெயிலில் காய்ந்தும் மற்றும் மழையில் நனைந்தும் வீணாகி வருகிறது.
மேலும் கடும் வெயிலால் சில இருசக்கர வாகனங்கள் பஞ்சராகும் நிலையும் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களை எடுத்துச்செல்ல வரும் அதன் உரிமையாளர்கள், பஞ்சரான வாகனங்களை எடுத்துச்செல்ல முடியாமல் கடும் அவதியடைகின்றனர்.
இந்த வாகன நிறுத்தும் இடமானது ஒருபுறம் கம்பி வேலியும், மற்றொருபுறம் கம்பியால் ஆன தடுப்பு மட்டுமே உள்ளதால் வாகனங்களுக்கு எந்தவொரு பாதுகாப்பும் இல்லை.
இதே நிலையில்தான் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடமும் உள்ளது. எனவே வாகன நிறுத்துமிடத்திற்கு மேற்கூரை வசதி ஏற்படுத்தி வாகனங்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தித்தர வேண்டுமென ரெயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் இதுநாள் வரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வாகன கட்டணம் உயர்வு
இந்நிலையில் ரெயில் நிலைய இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் முன்பு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.20-ஐ கட்டணமாக வசூலிக்கின்றனர். இருசக்கர வாகனத்தை நிறுத்தும்போது முதலில் ரூ.20-ஐ கட்டணமாக வசூலிப்பது மட்டுமின்றி வாகனத்தை எடுக்க வரும்போது 24 மணி நேரத்திற்கு பிறகு ஒரு மணி நேரம் கழித்தால்கூட ரூ.30 வசூல் செய்வதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். மேற்கூரை வசதியே செய்து கொடுக்காத நிலையில் இவ்வாறு வாகனத்திற்கு அடாவடியாக கட்டணம் வசூலிப்பது எந்தவிதத்தில் நியாயம் என்று இருசக்கர வாகன ஓட்டிகள் குமுறுகின்றனர்.
பயணிகள் குமுறல்
இதுபற்றி விழுப்புரத்தை சேர்ந்த ரமேஷ் கூறுகையில், இருசக்கர வாகனங்களை, ரெயில் நிலைய வளாகத்தில் இருக்கும் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு வெளியூர் செல்லும் பயணிகள் மீண்டும் விழுப்புரம் திரும்பி வரும் வரை வாகனங்கள் பாதுகாப்பாக இருக்குமா? என்ற அச்சம் ஒவ்வொருவரின் மனதிலும் நிலவுகிறது. ஏனெனில் இருசக்கர வாகன நிறுத்துமிடம் பெயரளவிற்குத்தான் இயங்குகிறது. இங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பாதுகாப்பு வசதி என்பதே கிடையாது. ஆனால் கட்டணத்தை மட்டும் உயர்த்தி வசூலிக்கின்றனர். தற்போது ஒரு நாள் வாடகை ரூ.20 வசூலிப்பதும், 24 மணி நேரத்திற்கு பிறகு ½ மணி நேரம் தாமதமாக வந்தாலும்கூட ரூ.30 வசூலிக்கின்றனர். இதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். எனது இருசக்கர வாகனத்தை இங்கு நிறுத்திவிட்டு இரவில் பணி முடிந்து விழுப்புரம் வரும்போது வாகனத்தை எடுப்பேன். அப்போது வாகனத்தில் குறைந்தது ½ லிட்டர் பெட்ரோல் தீர்ந்திருக்கும். வெயிலில் நிறுத்தப்படுவதால் பெட்ரோல் ஆவியாகி விடுகிறதா? அல்லது திருடப்படுகிறதா? என்பதே தெரிவதில்லை.
அதுமட்டுமின்றி சில சமயங்களில் கொளுத்தும் வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இருசக்கர வாகனங்களின் டயர்களில் காற்று இறங்கி விடுகிறது. நான் நள்ளிரவு 12 மணிக்கு வந்தால் அந்த சமயத்தில் வாகனத்தின் டயர்களுக்கு எங்கு சென்று காற்று நிரப்புவது? அப்படியே மெதுவாக வாகனத்தை தள்ளிக்கொண்டு சென்றாலும் பஞ்சராகி விடுகிறது.
இங்கிருந்து சென்னைக்கு செல்ல ரெயில் பயண கட்டண தொகை ரூ.80 என்றால் அதற்கு சற்று அதிகமாகவே இருசக்கர வாகனத்தில் ஏற்படும் பழுதை சரிசெய்ய செலவாகிறது. இதுகுறித்து விழுப்புரம் ரெயில் நிலைய அதிகாரிகளிடம் முறையிட்டாலும் உரிய பதில் இல்லை. எனவே அடிப்படை வசதிகளுடன் இருசக்கர வாகன பார்க்கிங்கை மேம்படுத்த வேண்டும் என்றார்.
ரெயில் கட்டணத்தைவிட கூடுதல்
விழுப்புரத்தை சேர்ந்த ஜெயராமன் கூறும்போது, திறந்தவெளியில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால் காலையில் விட்டுச்செல்லும் வாகனங்களை இரவில் எடுக்க வரும்போது வெயிலால் பஞ்சராகிறது.
இங்கிருந்து புதுச்சேரி செல்ல ரெயில் கட்டணமாக ரூ.30 செலவாகிறது. அதற்கு ஈடாக இருசக்கர வாகன கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. அப்படிப்பார்த்தால் ரெயில் கட்டணம், இருசக்கர வாகன கட்டணம் இவற்றுடன் கூடுதலாக ரூ.40 செலவு செய்தாலே இங்கிருந்து புதுச்சேரிக்கு இருசக்கர வாகனத்திலேயே சென்று வந்துவிடலாம் என்று தோன்றுகிறது. இது ஒருபுறம் இருக்க, இங்குள்ள வாகன நிறுத்தத்தில் நிறுத்தப்படும் வாகனங்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பல இருசக்கர வாகனங்கள் திருட்டுப்போயுள்ளதாக கூறப்படுகிறது. எனவே வெளியூர் செல்லும் பயணிகள் தங்களது இருசக்கர வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்திச்செல்ல அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், குறிப்பாக தற்போதுள்ள வாகன நிறுத்துமிடத்தில் மேற்கூரை வசதியை செய்து தருவதோடு வாகனத்திற்கு வசூலிக்கப்படும் கட்டண உயர்வை குறைத்து முன்பு வசூலித்தாற்போலவே வசூலிக்க வேண்டும் என்றார்.