கரைவெட்டி பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு

கரைவெட்டி பறவைகள் சரணாலயத்திற்கு பாம்பு தாரா, வண்ண நாரை உள்ளிட்ட அழியும் நிலையில் உள்ள வெளிநாட்டு பறவைகள் அதிகளவில் வந்துள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

Update: 2023-01-29 18:37 GMT

பறவைகள் சரணாலயம்

அரியலூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான கரைவெட்டி பறவைகள் சரணாலய ஏரி 1,000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மைல் தூரங்களை கடந்து பல்வேறு வகையான பறவைகள் ஆண்டுதோறும் வந்து செல்கின்றன.

சில பறவைகள் இங்கேயே கூடு கட்டி தங்கி விடுகின்றன. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பறவைகள் வந்து செல்வது குறித்து கணக்கெடுப்பது வழக்கம். அதன்படி நடப்பாண்டுக்கான கணக்கெடுப்பு பணி நேற்று நடைபெற்றது.

45 வகையான நீர்வாழ் பறவைகள்

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை ஓய்வு பெற்ற சுற்றுச்சூழல் அறிவியல் பேராசிரியர் சிவசுப்ரமணியன் தலைமையில் அரியலூர் அரசு கலைக்கல்லூரி சுற்றுச்சூழல் அறிவியல் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், வன அலுவலர்கள் ஈடுபட்டனர். இதுகுறித்து பேராசிரியர் சிவசுப்ரமணியன் கூறியதாவது:-

கரைவெட்டி பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாடுகளில் இருந்து 45 வகையான நீர்வாழ் பறவைகள் வந்துள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதில் அழியும் நிலையில் உள்ள பாம்பு தாரா, சாம்பல் கூலைகிடா, வெள்ளை அரிவாள் மூக்கன், வண்ண நாரை உள்ளிட்ட பறவைகளும், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து நீள சிறகு வாத்து, தட்டைவாயன், நாமத்தலை வாத்து, கூலை கிடா, லடாக்கிலிருந்து வரும் வரிதலை வாத்து உள்ளிட்டவை அதிகளவு காணப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டை விட இந்தாண்டு வெளிநாட்டு பறவைகளின் வரத்து அதிகரித்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்