பழனி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பழனி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Update: 2022-12-10 19:00 GMT


பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு குடிநீர், பாசன ஆதாரமாக பாலாறு-பொருந்தலாறு, வரதமாநதி, குதிரையாறு ஆகிய அணைகள் உள்ளன. கொடைக்கானல், சவரிக்காடு மலைப்பகுதிகளில் மழை பெய்யும்போது மேற்கண்ட அணைகளுக்கு நீர்வரத்து ஏற்படும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த தொடர்மழையால் பழனியில் உள்ள அணைகள் எல்லாம் நிரம்பி வழிந்தது. அதோடு அணைகளில் இருந்து உபரிநீரும் வெளியேற்றப்படுகிறது.

இந்நிலையில் 'மாண்டஸ்' புயல் காரணமாக கொடைக்கானல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு தொடர் மழை பெய்தது. மழை காரணமாக பழனியில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகமானது. ஏற்கனவே அணைகள் நிரம்பி உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி வரத்தாகும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. அதன்படி பாலாறு-பொருந்தலாறு அணைக்கு நேற்று காலையில் வினாடிக்கு 646 கனஅடி நீர் வரத்தானது. எனவே மதகு வழியே வினாடிக்கு 646 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது.

இதேபோல் வரதமாநதி அணையில் வரத்தான 67 கனஅடி நீரும், குதிரையாறு அணையிலும் வரத்தான 415 கனஅடி நீரும் அப்படியே வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று வார விடுமுறை என்பதால் வரதமாநதி, பாலாறு-பொருந்தலாறு அணை பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. அவ்வாறு வந்த சுற்றுலா பயணிகள் மதகில் இருந்து வெளியேறிய நீரை பார்த்து ரசித்தனர். தொடர்ந்து அணை பகுதியில் நின்று செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்