கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகரிப்பு
கன்னியாகுமரியில் சீசனையொட்டி அய்யப்ப பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கன்னியாகுமரியில் சீசனையொட்டி அய்யப்ப பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சுற்றுலா தலம்
சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிமாக இருக்கும்.
தற்போது அய்யப்ப பக்தர்கள் சீசன் நிலவி வருவதால் தினமும் ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் வருகிறார்கள். பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று ஏராளமான அய்யப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் அதிகாலையில் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் சூரியன் உதயமாகும் காட்சியை காண குவிந்தனர். ஆனால் மேகமூட்டம் காரணமாக சூரியன் உதயமான காட்சி தௌிவாக தெரியவில்ைல. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
விவேகானந்தர் மண்டபம்
தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்ல படகு துறையில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து படகில் சென்று பார்வையிட்டனர்.
சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்களின் வருகையால் கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, சன்செட் பாயிண்ட், மியூசியம், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் நேற்று காலையில் இருந்து கூட்டம் நிரம்பி வழிந்தது.
கடற்கரையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கன்னியாகுமரியில் சீசன் களைகட்ட தொடங்கி உள்ளது. இதனால் கன்னியாகுமரியில் உள்ள வியாபாரிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.