விளைச்சல் அதிகரிப்பால் விலை வீழ்ச்சி: தோட்டத்தில் கால்நடைகளுக்கு உணவாகும் முள்ளங்கி

Update: 2023-01-19 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் விளைச்சல் அதிகரிப்பால் முள்ளங்கி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் தோட்டத்திலேயே முள்ளங்கிகள் கால்நடைகளுக்கு உணவாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

விளைச்சல் அதிகரிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பாலக்கோடு, காரிமங்கலம், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முள்ளங்கி பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு சாகுபடி செய்யும் முள்ளங்கி தர்மபுரி மற்றும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பருவமழை நன்றாக பெய்ததால் மாவட்டத்தில் முள்ளங்கி விளைச்சல் வழக்கத்தை விட அதிகரித்தது.

இதனால் சந்தைகளுக்கு முள்ளங்கி வரத்து அதிகரிக்க தொடங்கியதால் அதன் விலை படிப்படியாக குறைய தொடங்கியது. தற்போது உழவர் சந்தைகளில் ஒரு கிலோ முள்ளங்கி ரூ.12 முதல் ரூ.14-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் வெளி மார்க்கெட்டுகளில் ரூ.15 முதல் ரூ.18 வரை விற்பனை செய்யப்படுகிறது. இருந்தபோதிலும் விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் ஒரு கிலோ முள்ளங்கியை ரூ.3 முதல் ரூ.4 வரை மட்டுமே கொள்முதல் செய்து வருகிறார்கள்.

கால்நடைகளுக்கு உணவு

அறுவடை செய்வதற்கு உரிய கூலியை கொடுப்பதற்கு கூட கட்டுப்படியாகாத அளவிற்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், முள்ளங்கி சாகுபடி விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்திக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் சில இடங்களில் விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் விளைந்துள்ள முள்ளங்கியை அறுவடை செய்யாமல் அப்படியே விட்டு உள்ளனர். சிலர் முள்ளங்கி தோட்டத்தில் கால்நடைகளை மேயவிட்டு உள்ளனர். இதனால் முள்ளங்கி கால்நடைகளுக்கு உணவாகும் அவலம் ஏற்பட்டு உள்ளது.

இதனிடையே காரிமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தில் சாகுபடி செய்திருந்த முள்ளங்கி மீது, டிராக்டரை ஏற்றி அதனை அழித்தார். அப்போது அவர் கூறுகையில், ஒரு ஏக்கரில் முள்ளங்கி நடவு செய்ய சுமார் ரூ.40 ஆயிரம் வரை செலவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இந்தநிலையில் தற்போது முள்ளங்கி விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்