பிரபல தோல், ஷூ கம்பெனியில் வருமான வரித்துறையினர் 3-வது நாளாக சோதனை
பிரபல தோல், ஷூ கம்பெனியில் வருமான வரித்துறையினர் 3-வது நாளாக சோதனை நடத்தப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் மட்டுமின்றி சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான தோல் மற்றும் ஷூ கம்பெனிகள் இயங்கி வருகிறது. இந்த நிறுவனங்களில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. அதன் பேரில் கடந்த 23-ந் தேதி வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த கம்பெனிகளில் சோதனை நடத்தினர்.
வருமான வரித்துறை ஆணையர் கிருஷ்ணபிரசாத் தலைமையில் 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள இந்த பிரபல நிறுவனத்திற்கு சொந்தமான தோல் தொழிற்சாலை, ஷூ கம்பெனிகளில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனை 3-வது நாளாக நீடித்தது. இந்த நிறுவனங்களில் உள்ள பதிவேடுகள், கணக்கு விவரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை சோதனை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 3-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் சோதனையின் போது ஆவணங்கள் ஏதாவது கைப்பற்றப்பட்டதா? என்பது பற்றிய எந்த ஒரு தகவலையும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.