ஓட்டல்களில் வருமானவரி அதிகாரிகள் திடீர் சோதனை

கோவையில் பிரபல குழுமத்துக்கு சொந்தமான ஓட்டல்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்

Update: 2022-05-28 17:17 GMT

வடவள்ளி

கோவையில் பிரபல குழுமத்துக்கு சொந்தமான ஓட்டல்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

ஆனந்தாஸ் ஓட்டல்

கோவையில் பல இடங்களில் பிரபல ஆனந்தாஸ் குழுமத்துக்கு சொந்தமான ஓட்டல்கள் உள்ளன. இந்த ஓட்டல்களில் வரும் வருமானத்துக்கு அரசிடம் முறையாக கணக்கு காண்பிக்கவில்லை என்று வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

இதையடுத்து 40-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் பல குழுக்களாக பிரிந்து கோவை மாநகர பகுதியில் உள்ள லட்சுமி மில் சந்திப்பு, சித்ரா, சுந்தராபுரம், ராம்நகர், ஆர்.எஸ்.புரம், வடவள்ளி, காந்திபுரம், புரூக் பாண்ட் ரோட்டில் உள்ள தனியார் வணிக வளாகம் ஆகிய 8 இடங்களில் இருக்கும் ஆனந்தாஸ் ஓட்டல்களுக்கு நேற்று காலை 7 மணிக்கு சென்றனர்.

பின்னர் அவர்கள் அந்த ஓட்டல்களுக்குள் இருந்த ஊழியர்கள் யாரையும் வெளியே விடவில்லை. அதுபோன்று உள்ளேயும் யாரையும் அனுமதிக்கவில்லை.

அதிகாரிகள் தீவிர சோதனை

தொடர்ந்து அதிகாரிகள் ஓட்டல்களில் இருந்த அனைத்து இடங்களிலும் அங்குலம் அங்குலமாக சோதனையில் ஈடுபட்டனர். அதுபோன்று இந்த ஓட்டலின் பங்குதாரர் பரமானந்தா என்பவர் வீடு வடவள்ளியில் உள்ளது.

அங்கும் நேற்று காலையில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் சென்றனர். அவர்கள் அங்கும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனை இர வரை நீடித்தது. சோதனையின்போது ஓட்டல்களின் முன்பு உள்ள மெயின் ஷட்டர்கள் மூடப்பட்டன. அத்துடன் அங்கு வேலை செய்து வரும் ஊழியர்கள் யாரும் செல்போன் பேச அனுமதிக்கப்படவில்லை.

அவர்களின் செல்போன்கள் அனைத்தும் வாங்கி வைக்கப்பட்டன. மேலும் ஓட்டல்களில் இருந்த கணினியில் உள்ள அனைத்து கணக்குகளும் சோதனை செய்யப்பட்டன. வெளியே இருந்து வரும் யாரையும் உள்ளே உணவருந்த அனுமதிக்கவில்லை.

ஆவணங்கள் சிக்கின

கோவையில் உள்ள 8 இடங்களில் இருக்கும் ஓட்டல்கள் மற்றும் பங்குதாரர் வீட்டில் சோதனை நடந்ததால் அந்த ஓட்டல்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்த சோதனையின்போது ஓட்டல்கள் மற்றும் பங்குதாரர் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. ஆனால் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பது தெரியவில்லை.

கோவையில் உள்ள ஆனந்தாஸ் ஓட்டல்கள் மற்றும் பங்குதாரர் வீட்டில் நடந்த வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்