மதுரை கட்டுமான நிறுவனங்களில் 3-வது நாளாக இன்றும் வருமானவரித்துறையினர் சோதனை

மதுரை கட்டுமான நிறுவனங்களில் 3-வது நாளாக இன்றும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-07-22 03:21 GMT

மதுரை,

மதுரையை தலைமையிடமாக கொண்டு ஜெயபாரத், அன்னை பாரத் மற்றும் கிளாட்வே சிட்டி ஆகிய தனியார் கட்டுமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் பல கோடி ரூபாய்க்கு வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக சென்னையில் உள்ள வருமானவரி புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

அதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் வருமானவரித்துறை அலுவலர்கள் அவனியாபுரம், வில்லாபுரம், திருப்பாலை, திருப்புவனம் ஆகிய இடங்களில் உள்ள அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களிலும், நிறுவனங்களின் உரிமையாளர்கள் வீடுகளிலும் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில், அவனியாபுரம் பாலுவின் மகன்கள் அழகர், வக்கீல் முருகன், கிளாட்வே ஹவுசிங் என்ஜினீயர் ஜெயக்குமார், ஜெயபாரத் ஹவுசிங் சரவணன், அன்னை பாரத் செந்தில் குமார் அவரது தம்பி, 3 மகள்கள் ஆகியோரது வீடுகளில் இருந்து ஏராளமான நகை, பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமானவரி அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதே போல் மதுரை கே.கே.நகரில் அரசு ஒப்பந்ததாரர் முருகவேல் என்பவருக்கு சொந்தமான ஆர்.ஆர்.கட்டுமான நிறுவனத்தில் நேற்று முன்தினம் தொடங்கிய சோதனை நேற்றும் தொடர்ந்து நடந்தது.

இந்த நிலையில், மதுரை கட்டுமான நிறுவனங்களில் 3-வது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெயபாரத் மற்றும் கிளாட்வே சிட்டி உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மூன்று நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்