அரசு ஒப்பந்ததாரர் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனை

புதுக்கோட்டையில் அரசு ஒப்பந்ததாரர் வீடு, அலுவலகத்தில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

Update: 2022-10-13 18:48 GMT

அரசு ஒப்பந்ததாரர்

புதுக்கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் பாண்டிதுரை (வயது 47). நெடுஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்ததாரர். 20 ஆண்டுகளுக்கு முன் இவரது தந்தை மாணிக்கம் நெடுஞ்சாலை துறையில் ரோடு ரோலர் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். பணியின் போது அவர் உயிரிழந்ததை தொடர்ந்து வாரிசு அடிப்படையில் பாண்டிதுரை நெடுஞ்சாலை துறையில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தார். பின்னர் புதுக்கோட்டையில் நெஞ்சாலைத்துறை உதவி கோட்ட அலுவலகத்தில் உதவியாளராக பணி உயர்வு பெற்றார். அப்போது அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சாலையோரம் உள்ள மரங்களுக்கு வர்ணம் பூசும் பணியை டெண்டர் எடுத்து கொடுத்து வந்தார்.

பின்னர் பல்வேறு அரசு ஒப்பந்தங்கள் எடுக்க வாய்ப்பு கிடைத்ததால் தனது பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று நெடுஞ்சாலை துறையில் அரசு ஒப்பந்ததாரராக பணி செய்ய தொடங்கினார். ெநடுஞ்சாலை துறையில் சாலையில் பதிக்கக்கூடிய ஒளி பிரதிபலிப்பான், சாலையில் வைக்கக்கூடிய பிரதிபலிப்பு பலகைகள் உள்ளிட்டவைகளை ஒப்பந்தம் எடுத்து வந்தார்.

5 இடங்களில்

இந்நிலையில் புதுக்கோட்டையில் உள்ள இவரது பிரதான அலுவலகத்திற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் 2 கார்களில் திடீரென வந்து அலுவலகத்தில் இருந்த ஒவ்வொரு அறையையும் சோதனை செய்தனர்.

மேலும் அவரது அலுவலகத்தின் அருகே உள்ள அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமாக புதுக்கோட்டை மச்சுவாடி அருகே சிட்கோ தொழிற்பேட்டையில் இயங்கி வரும் ஒரு தொழிற்சாலை, சிப்காட்டில் உள்ள ஒரு தொழிற்சாலை, கீழ 2-ம் வீதியில் உள்ள கட்டிட அலுவலகம் உள்பட 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் முழுவதும் சோதனை நடந்தது.

வரி ஏய்ப்பு

அதை தொடர்ந்து நேற்று 2-வது நாளாக இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டையில் மட்டும் அவரது வீடு, அலுவலகம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட 5 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலை துறையில் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு அவர் ஒப்பந்தம் எடுத்து நெடுஞ்சாலையில் பணிகள் செய்துள்ளதாகவும், இதில் இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற பொருட்களால் பணிகள் நடைபெற்று மோசடி நடந்துள்ளதும், வருமான வரித்துறைக்கு கணக்கு முறையாக காட்டவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் தற்போது வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

2 நாட்களாக நடைபெற்று வரும் சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் தற்போது தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகும் நெடுஞ்சாலைத்துறையில் அவர் பணிகள் எடுத்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்