சென்னையில் 2-வது நாளாக வருமான வரி சோதனை
சென்னையில் 2-வது நாளாக நடந்த வருமான வரி சோதனையில் போலி ரசீது மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை,
தமிழக அரசின் மின்சார வாரியத்தின் கீழ் இயங்கி வரும் மேட்டூர், தூத்துக்குடி, வடசென்னை அனல்மின் நிலையங்களுக்கு தேவையான கருவிகளை வாங்கியதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக எழுந்த புகாரின் பேரில் வருமானவரி துறையினர் நேற்று முன்தினம் அதிரடி சோதனையை தொடங்கினார்கள். இந்த சோதனையில் சென்னையை சேர்ந்த 3 நிறுவனங்கள் மற்றும் பொன்னேரியை மையமாக கொண்டு செயல்பட்ட ஒரு நிறுவனம் என மொத்தம் 4 நிறுவனங்களுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமானவரி துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த 4 நிறுவனங்களின் மூலமாகத்தான் அனல் மின் நிலையங்களுக்கு தேவையான கன்வேயர் பெல்ட், கேபிள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வாங்கப்பட்டு உள்ளன. இந்த பொருட்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் போலியான ரசீதுகளை போட்டு சப்ளை செய்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
வருமானவரி சோதனை நீடிப்பு
இது தொடர்பாக வருமானவரி சோதனையில் பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் திரட்டியுள்ளனர். இதன் அடிப்படையிலேயே நேற்று 2-வது நாளாகவும் வருமானவரி துறையினர் சோதனை நடத்தினர். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மகேந்திரா ஜெயின் என்பவரின் வீட்டிலும் 2-வது நாளாக நேற்று காலை 11 மணி வரை நடந்தது. இதுபோன்று மேலும் சில இடங்களிலும் சோதனை முடிவுக்கு வந்துள்ளது.
வடசென்னை, தூத்துக்குடி, மேட்டூர் அனல் மின் நிலையங்களிலும் நேற்று 2-வது நாளாக சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின்போது மின்சார வாரியத்தின் மூலமாக அனல் மின் நிலையங்களுக்கு வாங்கப்பட்ட பொருட்கள் என்னென்ன? அவைகள் எவ்வளவு விலைக்கு வாங்கப்பட்டு உள்ளன? என்பது பற்றிய தகவல்களையும் 2-வது நாள் சோதனையின்போது அதிகாரிகள் திரட்டி உள்ளனர்.
ஆவணங்கள் பறிமுதல்
சிறிய ஒப்பந்ததாரர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, அவர்களிடம் இருந்தும் பல்வேறு ஆவணங்களும் பறிமுதல் செய்துள்ளனர். அனல் மின்சார நிலையத்தில் இருந்து பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றினர்.
இந்த விசாரணை நேற்று மாலை வரை நீடித்தது. இந்நிலையில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களின் அடிப்படையில் நேற்று 2-வது நாளாக தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர் என்று சென்னையில் வருமானவரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறினர்.