நகை வியாபாரிகள் உள்பட 4 பேர் அதிரடி கைது
ஆலங்குளத்தில் 10 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக நகை வியாபாரிகள் உள்பட 4 பேரை அதிரடியாக போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளத்தில் 10 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக நகை வியாபாரிகள் உள்பட 4 பேரை அதிரடியாக போலீசார் கைது செய்தனர்.
10 வீடுகளில் கொள்ளை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காமராஜ்நகரில் கடந்த நவம்பர் மாதம் 12-ந் தேதி கடையம் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலை முருகன் வீடு உள்பட 3 வீடுகளில் மர்ம நபர்கள் புகுந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்க நகை, பணம் ஆகியவற்றை ெகாள்ளையடித்து சென்றனர்.
அதுபோல் கடந்த டிசம்பர் மாதம் 25-ந் தேதி அதேபகுதியில் உள்ள ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் வீரபுத்திரன் உள்பட 7 வீடுகளின் பூட்டை உடைத்து சுமார் ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்க நகை மற்றும் ரொக்கப் பணத்தை மர்மநபர்கள் அள்ளிச்சென்றனர்.
இதுகுறித்த புகாரின் ேபரில் ஆலங்குளம் போலீசாா் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.
3 நகை வியாபாரிகள்
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கடந்த 10-ந் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் (வயது 26) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். குன்னூரைச் சேர்ந்த ஜெரால்டு என்ற ஆரோக்கியநாதன் (35) என்பவர் நெல்லை கோர்ட்டில் சரண் அடைந்தார்.
இதையடுத்து ஆலங்குளம் போலீசாா் அவரைக் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதில் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
மேலும் கொள்ளையடித்த நகைகளை சஞ்சீவ்குமார், ஜெரால்டு ஆகியோர் மதுரையைச் சேர்ந்த வெங்கடேஷ் (40), வைய கண்ணன் (35), திண்டுக்கல்லைச் சேர்ந்த சங்கர் (36) ஆகிய 3 நகை வியாபாரிகளிடம் சந்தை மதிப்பை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
சிறையில் அடைப்பு
இதையடுத்து ஜெரால்டு மற்றும் 3 நகை வியாபாரிகளை போலீசார் கைது செய்து, 100 கிராம் தங்க நகைகளை மீட்டனர். தொடர்ந்து அவர்கள் 4 பேரும் ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.