அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள்
திருவோணம்- வாட்டாத்திக்கோட்டை போலீஸ் சரகப் பகுதிகளில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்களை தடுக்க போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்
ஒரத்தநாடு:
திருவோணம்- வாட்டாத்திக்கோட்டை போலீஸ் சரகப் பகுதிகளில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்களை தடுக்க போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்
தொடரும் திருட்டு சம்பவங்கள்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே திருவோணம் மற்றும் வாட்டாத்திக்கோட்டை ஆகிய போலீஸ் சரக பகுதிகளில் கடந்த சில மாதங்களாக திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக காலையில் மாட்டு பாலை கறந்து கடைக்கு விற்பனைக்கு கொண்டு சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு, வீடுகளை உடைத்து நகை -பணம் திருட்டு, விவசாய மின்மாற்றியில் செப்பு கம்பி வெட்டி கடத்தல் போன்ற சம்பவங்கள் நடக்கிறது.
இதேபோல் மதுக்கடையில் சுவற்றை துளையிட்டு மது பாட்டில்கள் திருட்டு, மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு, வீடுகளுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் திருட்டு, அரசுக்கு சொந்தமான ஆற்றுப்படுகைகளில் மணல் திருட்டு, வெளிச்சந்தையில் மதுபாட்டில் விற்பனை, சூதாட்டம், மதுபிரியர்கள் குடிபோதையில் சாலையில் செல்லும் பெண்களிடம் தகராறு செய்வது போன்ற சமூக விரோத சம்பவங்கள் நாளுக்கு- நாள் அதிகரித்து வருகிறது.
கனரக வாகனங்களால் விபத்து
இதேபோல் திருவோணம் - பட்டுக்கோட்டை பிரதான சாலையில் நாள் ஒன்றுக்கு 1000-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் மணல், ஜல்லி, கிராவல், சிமெண்டு தூள்கள் ஏற்றப்பட்ட வாகனங்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் அணிவகுத்து செல்கிறது. இதில் அனுமதி இன்றி கனிம பொருட்களை கடத்தி செல்லும் கனரக வாகனங்கள் கட்டுக்கடங்காத மிக அதிவேகத்தில் இயக்கப்படுகிறது. இதனால் ஏற்பட்ட விபத்துகளில் சிலர் பலியாகி உள்ளனர். மேலும் தற்போது ஆடிக் காற்று வீசுவதால் வாகனத்தில் மூடப்படாமல் கொண்டு செல்லப்படும் ஜல்லி கற்கள், சிமெண்டு தூள்கள் காற்றில் பறந்து சாலையில் செல்வோருக்கு இடையூறுகளையும், விபத்துகளையும் ஏற்படுத்துகிறது.
போலீஸ் பற்றாக்குறை
திருவோணம் மற்றும் வாட்டாத்திக்கோட்டை போலீஸ் நிலையங்களில் போலீசார் பற்றாக்குறையாக உள்ளனர். இதன் காரணமாக போலீசார் சரிவர ரோந்து பணியில் ஈடுபடாமல் இருப்பதால் தான் திருட்டு உள்ளிட்ட சமூக விரோத சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே திருவோணம் மற்றும் வாட்டாத்திக்கோட்டை போலீஸ் நிலையங்களுக்கு நேரடி சப்-இன்ஸ்பெக்டர்களையும், போதுமான போலீசார்களையும் நியமிக்க போலீஸ் உயர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.