புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழா: எதிர்க்கட்சியினருக்கு மத்திய நிதி மந்திரி வேண்டுகோள்

புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதனை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2023-05-26 00:25 GMT

சென்னை,

டெல்லியில் ரூ.850 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் பிரமாண்டமாக கட்டப்பட்டு இருக்கிறது.

வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதன் திறப்பு விழா நடக்கிறது. பிரதமர் நரேந்திரமோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்துவைக்கிறார்.

எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

இதற்கிடையே புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முதான் திறந்துவைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன.

"ஜனாதிபதி இந்திய நாட்டின் தலைவர் மட்டும் அல்ல. அவர் நாடாளுமன்றத்தின் ஒருங்கிணைந்த அங்கம். அவர் இல்லாமல் நாடாளுமன்றம் செயல்படாது. அப்படிப்பட்ட ஜனாதிபதி இல்லாமல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்துவைக்க பிரதமர் மோடி முடிவு எடுத்து உள்ளார். எனவே திறப்பு விழாவை புறக்கணிக்கும் கூட்டு முடிவை எடுத்து இருக்கிறோம்" என்று பிரதான எதிர்க்கட்சிகள் அறிவித்து இருக்கின்றன.

காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகள் என 19 கட்சிகள் இந்த முடிவை எடுத்து இருக்கின்றன.

மத்திய மந்திரி பேட்டி

நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ள நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பேட்டி அளித்தார்.

அப்போது கவர்னர்கள் ஆர்.என்.ரவி (தமிழ்நாடு), இல.கணேசன் (நாகாலாந்து), தமிழிசை சவுந்தரராஜன் (தெலுங்கானா, புதுச்சேரி), மத்திய மந்திரி எல்.முருகன், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-

செங்கோல்

புதிய நாடாளுமன்ற கட்டிடம் 28-ந் தேதி (நாளை மறுதினம்) நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. அப்போது 1947-ம் ஆண்டில் தமிழகத்தில் தயாரான தங்க முலாம் பூசப்பட்ட செங்கோல், மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே நிறுவப்பட உள்ளது. அதை பிரதமர் நரேந்திர மோடி நிறுவுகிறார். இந்த செங்கோல் பற்றிய அனைத்து ஆதாரங்களும் உள்ளன.

1947-ம் ஆண்டு ஆகஸ்டு14-ந் தேதி ஆதீனங்கள், குருமார்கள் ஊர்வலமாகச் சென்று, அந்த செங்கோலை நாட்டின் முதல் பிரதமரான நேருவிடம் கொடுத்தனர். தற்போது அது அலகாபாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த செங்கோல் அங்கே இருக்கும் விவரம் உடனடியாக தெரியவில்லை. அதை தேடித்தான் கண்டுபிடித்தோம்.

1978-ம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடும்போது, காஞ்சி மடாதிபதி பேசும்போது அந்த செங்கோல் பற்றிய விவரங்கள் மீண்டும் வெளியே தெரிய வந்தன. பின்னர் 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் ஒரு கட்டுரை வந்தது. அதன் அடிப்படையில் பிரதமருக்கு பத்மா சுப்பிரமணியம் கடிதம் எழுதினார். அதன் பிறகு ஒரு சிலரிடம் அதுபற்றிய உண்மை தகவல்களை சேகரிக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். அதன் பின்னர்தான் அந்த செங்கோல் இருக்கும் இடம் தெரிய வந்தது. அந்த செங்கோல்தான் புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ளது.

மறுபரிசீலனை

எனவே இதில் அரசியல் செய்ய ஒன்றுமில்லை. அந்த செங்கோல் தமிழகத்தில் தயாரானது என்பது மிகுந்த மகிழ்ச்சி, கவுரவம் மற்றும் பெருமிதத்திற்கு உரிய விஷயம். அந்த பெருமித உணர்ச்சி பற்றி குறிப்பிட வேண்டியது என்னவென்றால், இந்திய சுதந்திரத்திலும், அதிகாரப் பரிமாற்றத்திலும் தமிழகத்தின் பங்களிப்பைதான். எனவே இங்கு அரசியல் செய்யத் தேவையில்லை.

புது நாடாளுமன்றத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் பங்கேற்காதது, எதிர்க்கட்சிகள் எடுத்துள்ள நிலைப்பாடு. அந்த கட்டிடம் இன்னும் 200 ஆண்டுகள் இருக்கக்கூடியது. மக்கள் பிரச்சினை பற்றி பேசும் சபையான ஜனநாயகத்தின் கோவிலை புறக்கணிக்க வேண்டுமா? பிரதமரை விரும்பவில்லை என்றால்கூட ஜனநாயகத்தின் கோவிலை புறக்கணிப்பது நல்லதல்ல. அவர்களின் நிலைப்பாட்டை மக்களுக்காக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

முறையான அழைப்பு விடுக்கவில்லை என்ற அவர்களின் குற்றச்சாட்டு பற்றி விசாரிக்க வேண்டும். மக்களவையின் பொது செயலாளர் மூலமாக, சபாநாயகர் தரப்பில் இருந்து அவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது. அது முறையல்ல என்கிறார்களா? அல்லது வேறு எதையும் எதிர்பார்க்கிறார்களா? என்பது புரியவில்லை.

இழிவான விமர்சனம்

இந்த விழா தொடர்பாக ஜனாதிபதிக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என்ற அவர்களின் குற்றச்சாட்டு, ஆச்சரியம் அளிக்கிறது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இந்த ஜனாதிபதியின் முக்கியத்துவம் பற்றி இன்று பேசும் இந்த எதிர்க்கட்சிகள்தான், ஒரு கட்டத்தில் அவர் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக இருந்தபோது கசப்பான பிரசாரத்தை மேற்கொண்டனர்.

அந்த காலகட்டத்தில் அவரைப் பற்றி அவர்கள் சொன்ன வார்த்தைகளை இப்போது நான் திருப்பிச் சொல்ல விரும்பவில்லை.

அவரை இழிவாகவும், குற்றம்சாட்டியும், 'ரப்பர் ஸ்டாம்ப்' என்றும் இந்த கட்சிகளின் தலைவர்கள்தான் அன்று பேசினர். தீய சக்தியின் பிரதிநிதி என்றும் கூறினர். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை மனதில் வைத்து அவர்கள் அப்படி பேசியிருக்கலாம். அவர்கள்தான் இப்போது அவருக்கு மரியாதை அளிக்கின்றனர்.

சோழர் பாரம்பரியமா?

செங்கோல் வழங்கும் முறை, சோழர் பரம்பரையில் இருந்ததாக அடையாளம் கண்டது ராஜாஜிதான். அவர் திருவாவடுதுறை மடத்துடன் பேசி ஆலோசனை செய்து முடிவு செய்யப்பட்டது. சோழர்கள் உலகம் முழுவதும் அறியப்பட்டவர்கள். சேரர், சோழர், பாண்டியர்களுக்கு பதவிப் பரிமாற்றம் நடக்கும்போது குருமார்கள் ஆசியுடன் தர்ம தண்டத்தை (செங்கோல்) பெற்றுக்கொள்வார்கள். அது நமது பாரம்பரியம் மற்றும் கலாசாரமாகும்.

ஆங்கிலேயரின் ஆட்சி மாறியபோது அதிகாரத்தை கொடுக்கும் அடையாளமாக அந்த செங்கோல் நேருவிடம் அளிக்கப்பட்டது என்றும், ஆனால் இப்போது ஆட்சி நடந்து கொண்டிருக்கும்போது இந்த செங்கோல் எந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறது? என்று கேட்கிறீர்கள். நேருவிடம் தரப்பட்ட அந்த செங்கோல் மக்களவையில்தானே இருந்திருக்க வேண்டும். ஆனால் அங்கு இல்லை என்பதால்தான் அதை மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி நிறுவ இருக்கிறார்.

திருக்குறளும் உள்ளது

பிரிட்டீஷ் அரசர், அரசிகள் முடிசூடும்போது வழங்கப்படும் செங்கோலில் சிலுவைச்சின்னம் இருக்கும். இங்குள்ள செங்கோலில் நந்தி உள்ளது. அதை ஒரு மத அடையாளமாக பார்க்கலாமா? என்று கேட்கிறீர்கள். அங்கு சிலுவை இருப்பதால் இங்கு நந்தி இருக்க வேண்டும் என்பதல்ல. பல நாடுகளிலும் இந்த செங்கோல் முறை கடைபிடிக்கப்படுகிறது.

ஜனநாயகத்தில் உள்ள மக்களின் சக்தியாக அது கொடுக்கப்படுகிறது. அதை கொடுப்பதன் மூலமாகத்தான் அதிகாரப் பரிமாற்றம் நடக்கிறது. தர்மம், நியாயம், சமதர்ம தத்துவங்களுடன் அரசாள வேண்டும் என்ற அடையாளமாக அது கொடுக்கப்பட்டது. அந்த செங்கோலைத்தான் மக்களவையில் வைக்கிறோமே தவிர வேறொன்றும் இல்லை. அந்த இடத்தில் இருக்க வேண்டியது இப்போது இல்லை என்பதால் அதை வைக்கும் அவசியம் வந்துள்ளது.

செங்கோலின் பின்னால் இருக்கும் தத்துவத்தை மறந்துவிடக் கூடாது. தேவாரத்தில் இருந்து மட்டுமல்லாமல், திருக்குறளின் 10 வரிகள் "வானோக்கி வாழும்...., வேலன்று வெற்றி தருவது....., குடிதழீஇக் கோலோச்சும்...." என்பதுபோன்ற திருக்குறள்கள்களையும் கொண்டுள்ளன. எனவே சிவனை வழிபடுவோர் மட்டும் அதில் உள்ளதாக கூற முடியாது.

பரிவர்த்தனையின் அடையாளம்

நம்மிடம் உள்ள வரலாற்று ஆதாரங்களில் செங்கோல் வழங்கும் முறை பரவலாக உள்ளது என்றும், நேருவிடம் திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோல் ஒரு பரிசுதானே தவிர அதிகார மாற்றத்திற்கான அடையாளமல்ல என்று அப்போது எழுதப்பட்டு உள்ளதாகவும் கேட்கிறீர்கள். அதிகார மாற்றத்திற்கான அடையாளம் என்று சொல்வதற்கு ஆவண ஆதாரங்கள் இருக்கிறதா? என்று கேட்டால், ஏராளமாக உள்ளன. பல ஆய்வுகளும் உள்ளன.

வெறும் கைகுலுக்குவதே அதிகார மாற்றத்திற்கான அடையாளமாக இருக்கவில்லை. இந்தியாவில் ஆங்கிலேயர்களின் அதிகாரத்தை பற்றிய அறிவிப்பு, அலகாபாத் பிரயாக்ராஜ்ஜில் வாசிக்கப்பட்டது. அதற்கும் ஆதாரம் உள்ளது. எனவே கைகுலுக்கும் முறையால் மட்டுமே அதிகாரம் பரிமாற்றம் செய்யப்படவில்லை என்பதே உண்மை.

செங்கோல் வழங்குவது, மன்னர் ஆட்சியை கொண்டு வருகிறது போல் பிரதிபலிக்கிறது என்று சொன்னால், அப்படி இல்லை. வேறு பல நாடுகளிலும் செங்கோல் வழங்கும் நடைமுறை உள்ளது. அரசர் போல ஆட்சி நடத்தும் நோக்கம் எதுவும் இல்லை. 1947-ம் ஆண்டிலும் அந்த நோக்கத்தில் நேருவிடம் செங்கோல் வழங்கப்படவில்லை. அது ஆளுமையின் பரிவர்த்தனையின் அடையாளம்தான்.

மதச்சார்புள்ள செங்கோலா?

ஒரு தலைப்பட்சமாக ஆட்சி நடந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த செங்கோல் வழங்கப்படுகிறது. அந்த செங்கோலைப் பார்க்கும்போதெல்லாம் அனைவரையும் அரவணைத்து ஆட்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரும். ஆனால் அதில் இந்துக்களின் கடவுளான நந்தி, லட்சுமியின் வடிவங்கள் மட்டுமே இருப்பதால் அது ஒருதலைப்பட்சமாக இருப்பதாகவும், அது மற்ற மதத்தினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தாதா? என்றும் கேட்கிறீர்கள்.

இது முதலில் நேருவிடம் கொடுக்கப்பட்டது. அவரும் அதை வாங்கிக் கொண்டார். இந்த நாட்டில் அப்போதும், இப்போதும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் வாழ்ந்தனர், வாழ்கின்றனர். இது கலாசாரம், பாரம்பரிய இணைப்பைப் பற்றிய ஒரு அடையாளமாகும்.

உலகத்தில் அதிக அளவில் இஸ்லாமியர்கள் வாழும் இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் உள்ள கரன்சி நோட்டில் விக்னேஷ்வரர், லட்சுமி ஆகிய தெய்வங்களின் படம்தான் இருக்கும். குபேரர் என்பவர், அந்த நாட்டில் வழிபடப்படும் தெய்வம். மிகப் பெரிய அளவில் கருட விஷ்ணு காஞ்சனா என்ற விக்கிரகம் அங்கு உள்ளது. அங்குள்ள பாதுகாப்பு தலைமையகத்தில் உள்ள அறைகளுக்கு பஞ்ச பாண்டவர்களின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. அதற்காக அங்குள்ள யாரும் கஷ்டப்படவில்லை. ஏனென்றால் அவை கலாசாரம் மற்றும் பழமையின் அடையாளங்களாகும். எல்லாருக்கும் நியாயம் வழங்கும் நாடாக அது வளர்ந்து வருகிறது என்பதை எடுத்துக்காட்டும் சின்னங்கள் அவை. இதை அரசியல் ரீதியாக பேசினாலும் அதற்கு பதில் உண்டு.

நேருவிடம் அந்த செங்கோல், ஆட்சி மாற்றத்தின்போது கொடுக்கப்பட்டது. ஆட்சி நடக்கும் இடத்தில் அது வைக்கப்பட்டால்தான் அனைவரது கண்ணிலும் அது தென்படும். அது சொல்லும் விஷயம் பற்றிய ஊக்கம் கிடைக்கும். ஆனால் அது எங்கு இருந்தது? நிருபர் நீங்கள் சொன்னதுபோல், ஆனந்த பவன் என்ற அவரது வீட்டில்தானே. அது நாடாளுமன்றத்தில்தான் இருந்திருக்க வேண்டும் என்று நீங்கள் சொன்னால் அதை ஒப்புக்கொள்கிறேன்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்