திருச்சுழியில் அரசு கலைக்கல்லூரி திறப்பு
திருச்சுழியில் அரசு கலைக்கல்லூரி திறக்கப்பட்டது. அமைச்சர் தங்கம் தென்னரசு குத்து விளக்கு ஏற்றினார்.
காரியாபட்டி,
திருச்சுழியில் அரசு கலைக்கல்லூரி திறக்கப்பட்டது. அமைச்சர் தங்கம் தென்னரசு குத்து விளக்கு ஏற்றினார்.
கல்லூரி திறப்பு
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு குத்து விளக்கு ஏற்றினார். பின்னர் அவர் வகுப்பு அறைகளை பார்வையிட்டார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திருச்சுழி பகுதி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை 1,139 விண்ணப்பங்கள் இணையவழி மூலமாக வர பெற்றுள்ளது.
உயர்கல்வி
அடுத்த ஆண்டு இந்த பகுதியில் புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் வர உள்ளது. புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறந்து வைத்ததன் மூலம் பின்தங்கிய பகுதி மாணவர்களின் உயர்கல்விக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவி உள்ளார்.
இவ்வாறு இவர் கூறினார்.
விழாவில் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி, கலெக்டர் மேகநாதரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் தங்கப்பாண்டியன், அசோகன், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், மதுரை மண்டல உயர்கல்வித்துறை அதிகாரி பொன் முத்துராமலிங்கம், அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. கல்யாண்குமார், திருச்சுழி யூனியன் தலைவர் பொன்னுத்தம்பி, காரியாபட்டி பேரூராட்சித்தலைவர் செந்தில், ஒன்றிய செயலாளர்கள் சந்தனபாண்டியன், காரியாபட்டி செல்லம், கண்ணன், நரிக்குடி ப.பா.போஸ், கண்ணன், மாவட்ட கவுன்சிலர்கள் கமலி பாரதி, தங்கதமிழ்வாணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.