நாராயணி மருத்துவமனையில் கருத்தரிப்பு மையம் திறப்பு விழா

நாராயணி மருத்துவமனையில் கருத்தரிப்பு மையத்தை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

Update: 2023-04-15 17:39 GMT

வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை வளாகம் மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் புதிய கருத்தரிப்பு மையம் திறப்பு விழா நடந்தது. மருத்துவமனை மருத்துவ துணை கண்காணிப்பாளர் கீதா இனியன் வரவேற்றார். நாராயணி மருத்துவமனை இயக்குனர் பாலாஜி தலைமை தாங்கி பேசுகையில், 'இந்த கருத்தரிப்பு மையத்துக்கு வரும் ஏழை, எளிய பெண்களில் 4 அல்லது 5 பேருக்கு ஒவ்வொரு மாதமும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும்' என்றார்.

சிறப்பு அழைப்பாளராக வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி கருத்தரிப்பு மையத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

உணவு பழக்க வழக்கம், காலநிலை மாற்றம் மற்றும் காற்று மாசு காரணமாக பெண்களுக்கு குழந்தையின்மை ஏற்படுகிறது. குழந்தையின்மைக்கு பெண்கள் மட்டும் காரணம் இல்லை, ஆண்களும் தான். குழந்தை இன்மையினால் கணவர் மனைவியை விவாகரத்து செய்வது, கொடுமை படுத்துவது, உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் ஏளனமாக பேசுவது உள்ளிட்டவை நடக்கிறது. மேலும் குழந்தை இல்லாத பெண்களின் கணவர்கள் 2-வது திருமணம் செய்து கொள்கின்றனர்.

ஒருபுறம் குழந்தை இல்லாததால் பெண்கள் அவதி அடைந்து வருகின்றனர். மறுபுறம் குழந்தையை பெற்ற தாய்மார்கள் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசி செல்லும் கொடுமை நடந்து வருகிறது. குழந்தை வேண்டும் என்பதற்காக லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கின்றனர். குழந்தையின்மைக்கு தற்போது மருத்துவ உலகில் பல்வேறு தொழில்நுட்பங்கள் மூலம் பெண்களுக்கு கருத்தரிப்பு செய்கின்றனர். இந்த மையத்தில் குறைந்த செலவில் கருத்தரிப்பு செய்வது பாராட்டுதலுக்கு உரியது.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

விழாவில் டாக்டர் சித்தார்த்தா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி செவிலியர் கண்காணிப்பாளர் விமலா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்