கூடலூரில் வீட்டு வசதி வாரியம் சார்பில் ரூ.10 கோடியே 14 லட்சத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகள் திறப்பு

கூடலூரில் வீட்டு வசதி வாரியம் சார்பில் ரூ.10 கோடியே 14 லட்சம் செலவில் கட்டப்பட்ட குடியிருப்புகள் திறக்கப்பட்டது.

Update: 2023-07-12 18:45 GMT


கூடலூர்


கூடலூரில் வீட்டு வசதி வாரியம் சார்பில் ரூ.10 கோடியே 14 லட்சம் செலவில் கட்டப்பட்ட குடியிருப்புகள் திறக்கப்பட்டது.


ரூ.10 கோடியே 14 லட்சம்


கூடலூர் மார்தோமா நகரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளது. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 144 வீடுகள் இருந்த நிலையில் பெரும்பாலானவை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக குடியிருப்புகளின் சுவர்கள் பெயர்ந்து கீழே விழுகிறது.


இதனால் எந்த நேரத்திலும் இணைந்து விழும் அபாயத்தில் உள்ளதாக குடியிருப்புவாசிகள் நீண்ட காலமாக புகார் தெரிவித்து வந்தனர். இதைத் தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு ரூ.10 கோடியே 14 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் பழுதடைந்த கட்டிடங்கள் இடித்த இடங்களில் 30 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி தொடங்கப்பட்டது.


தொடர்ந்து பணி நிறைவு பெற்று ஒரு ஆண்டுக்கு மேலாக குடியிருப்புகள் திறக்கப்படாமல் பூட்டியே வைக்கப்பட்டிருந்தது. இதனால் புதிய கட்டிடமும் வீணாகும் நிலை ஏற்பட்டது. மேலும் தற்போது வசிக்கும் கட்டிடங்களும் நாளுக்கு நாள் பலமிழந்து சுவர்கள் பெயர்ந்து உடைந்து விழுகிறது. இதில் பலர் காயமும் அடைந்துள்ளனர். இதனால் புதிய கட்டிடங்களை விரைவாக திறக்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.


புதிய குடியிருப்புகள் திறப்பு


இதைத்தொடர்ந்து தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் கூடலூர் வீட்டு வசதி வாரிய புதிய குடியிருப்புகளை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் குத்து விளக்குகள் ஏற்றும் நிகழ்ச்சி காலை நடைபெற்றது. ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா, முன்னாள் எம்.எல்.ஏ. திராவிட மணி, நகராட்சி தலைவர் பரிமளா ஆகியோர் குத்து விளக்குகளை ஏற்றினர். தொடர்ந்து குடியிருப்புகள் திறக்கப்பட்டது.


நிகழ்ச்சியில் வீட்டு வசதி வாரிய உதவி பொறியாளர் குருசாமி, உதவி செயற்பொறியாளர் விஜய் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், வீட்டு வசதி வாரிய அலுவலர்கள், அரசு ஊழியர்கள் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இது குறித்து வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் கூறும்போது, புதிய வீடுகள் மூப்பு அடிப்படையில் பயனாளிகளுக்கு விரைவில் ஒதுக்கப்படும் என தெரிவித்தனர்.





Tags:    

மேலும் செய்திகள்