அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட தொடக்க விழா

மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் தொடக்க விழாவை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.

Update: 2023-06-04 18:45 GMT

மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் தொடக்க விழாவை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.

அப்போது கலெக்டர் பேசியதாவது:-

35 சதவீத மானியம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 7 ஆயிரம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் 70 சிறு நிறுவனங்கள், 4 பெரிய அளவிலான தொழிற்சாலைகள் உள்ளன. மேலும் இம்மாவட்டத்தில் உணவுப் பொருட்கள் உற்பத்தி, கடல்சார்ந்த பொருள்கள் உற்பத்தி அதிகளவில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் நோக்கத்தின் அடிப்படையிலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும் அதில் பழங்குடியினர் மற்றும் பட்டியலின தொழில் முனைவோர்களின் பங்களிப்பை அதிகப்படுத்தவும் 37 எண்ணிக்கையில் ரூ.18 கோடி இலக்கீடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலமாக பழங்குடியினர் மற்றும் பட்டியலினத்தவர் 35 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று பயனடையலாம். மானியம் மொத்த திட்டத் தொகையில் 35 சதவீதம் ஆகும். மானிய உச்சவரம்பு ரூ.1.50 கோடி ஆகும். இதுமட்டுமின்றி, கடன் திரும்ப செலுத்தும் காலம் முழுவதும் 6 சதவீதம் வட்டிமானியமும் வழங்கப்படும். மொத்த திட்டத்தொகையில் 65 சதவீதம் வங்கிக் கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு 35 சதவீதம் அரசின் பங்காக முன்முனை மானியம் வழங்கப்படும். எனவே, பயனாளர்களுக்கு தமது பங்காக நிதி செலுத்த வேண்டிய தேவை இருக்காது.

திறன் மேம்பாட்டு பயிற்சி

தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி மற்றும் குறிப்பிட்ட திட்டம் தொடர்பான சிறப்பு பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சி, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் இலவசமாக வழங்கப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ள பழங்குடியினர் மற்றும் பட்டியலின தொழில் முனைவோர் மற்றும் அவர்களுக்கு உரிமையான தொழில் அலகுகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். தமிழகத்தில் தாட்கோ மூலம் கடனுதவி வழங்குவதில் மயிலாடுதுறை மாவட்டம் முதன்மை மாவட்டமாக திகழ்கிறது என்றார். முன்னதாக, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மூலம் மயிலாடுதுறையை சேர்ந்த பயனாளி கேசவன் என்பவருக்கு ரூ.27.16 லட்சம் செலவில் ரூ.9.50 லட்சம் மானியத்துடன் லாரியையும், மயிலாடுதுறை சேர்ந்த பயனாளி வினோதா என்பவருக்கு ரூ.32.27 லட்சம் செலவில் ரூ.11.29 லட்சம் மானியத்துடன் பொக்லின் எந்திரத்தையும் கலெக்டர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மணிவண்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முத்துசாமி, சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் தலைவர் செல்லதுறை, ஸ்டேட் வங்கி மேலாளர் ராமநாதன், இந்தியன் வங்கி மேலாளர் சுதாகரன், தேசிய பட்டியல் பழங்குடியினத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மைய முதுநிலை மேலாளர் அனந்தநாராயண பிரசாத், மாவட்ட தொழில் மைய மேலாளர் சரவணன், மாவட்ட பொது மேலாளர் (தாட்கோ) சுகந்தி பரிமளம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்