ஸ்ரீமூலக்கரையில் ரூ.1கோடியில் 16மெகாவாட்திறன்கொண்ட மின்மாற்றி திறப்பு

ஸ்ரீமூலக்கரை துணை மின்நிலையத்தில் ரூ.1.053 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 16 மெகாவாட் திறன் கொண்ட புதிய மின்மாற்றியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணாலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதன் மூலம் 50 கிராமங்களுக்கு சீரான மின்சப்ளை கிடைக்கும்.

Update: 2022-11-07 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீமூலக்கரை துணை மின்நிலையத்தில் ரூ.1.053 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 16 மெகாவாட் திறன் கொண்ட புதிய மின்மாற்றியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணாலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதன் மூலம் 50 கிராமங்களுக்கு சீரான மின்சப்ளை கிடைக்கும்.

ஸ்ரீமூலக்கரை துணை மின்நிலையம்

தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள ஸ்ரீமூலக்கரை துணை மின் நிலையம் பேட்மாநகரம் பரம்பில் செயல்பட்டு வருகிறது. இந்த மின் நிலையத்தின் மூலமாக ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் மற்றும் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 50 கிராமங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சீரான மின் விநியோகம் செய்திட ஏதுவாக ரூ.1.053 கோடி செலவில் 16 மெகாவாட் மின்மாற்றி புதியதாக அமைக்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இதனை நேற்று சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, துணை மின் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தலைமை தாங்கினார். ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், ஸ்ரீமூலக்கரை, அணியாபரநல்லூர் பஞ்சாயத்து தலைவர்கள் முன்னிலை வகித்தனர். விழாவில், தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய மின் மாற்றியை இயக்கி வைத்து, மரக்கன்றுகள் நட்டார்.

50 கிராமங்களுக்கு சீரான மின்சாரம்

இந்த நிகழ்ச்சியில் மின்வாரிய செயற்பொறியாளர்கள் ரெமோனா, முத்துராஜ், உதவி செயற்பொறியாளர்கள் விஜயலெட்சுமி, ரமேஷ், உஷாதேவி, வேலாயுதம், லால்பகதூர்சாஸ்திரி மற்றும் மின்வாரிய அதிகாரிகள், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

புதியதாக நிறுவப்பட்டுள்ள இந்த புதிய மின்மாற்றி மூலமாக ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் மற்றும் திருச்செந்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலுள்ள 50 கிராமங்களிலுள்ள குடியிருப்புகள், தொழிற்சாலைகளிலுள்ள 24ஆயிரத்து 300 மின் இணைப்புகளுக்கு சீரான மின்விநியோகம் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்