வேதாரண்யத்தில், முழு வீச்சில் உப்பு உற்பத்தி
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: வேதாரண்யத்தில், முழு வீச்சில் உப்பு உற்பத்தி
வேதாரண்யம்:
வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி முழு வீச்சில் நடந்து வருகிறது.
இயற்கை சீற்றங்கள்
வங்கக்கடலோரம் அமைந்த நாகை மாவட்டத்தில் மீன்பிடி மற்றும் விவசாயம் பிரதானமான தொழில்களாக நடந்து வருகின்றன. காவிரியின் கடைமடை பகுதி என்பதால் பெரும்பாலான பரப்பளவு விளை நிலங்கள் வானம் பார்த்த பூமியாக உள்ளன. இந்த பகுதியில் பெரும்பாலும் மழையை நம்பி விவசாயம் நடந்து வருகிறது.
நிலத்தடி நீர் ஆதாரம் குறைவாக இருப்பதால் ஆற்றில் உரிய நேரத்தில் தண்ணீர் வராவிட்டால் நெல் சாகுபடி பணிகள் முற்றிலும் முடங்கும் அபாயம் உள்ளது. அதேபோல இயற்கை சீற்றங்களால் மீன்பிடி தொழிலும் பாதிக்கப்பட்டு வருகிறது. மீன்பிடி மற்றும் விவசாயத்தை போல நாகை மாவட்டத்தில் பிரதானமாக விளங்கும் மற்றொரு தொழில் உப்பு உற்பத்தி ஆகும்.
வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி
இந்திய அளவில் உப்பு உற்பத்தியில் குஜராத்துக்கு அடுத்தபடியாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி, நாகை மாவட்டம் வேதாரண்யம் உள்ளிட்ட இடங்களில் உப்பு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. வேதாரண்யம் அருகே உள்ள அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு உள்ளிட்ட இடங்களில் 9 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உப்பளங்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உப்பு உற்பத்தியில் 2-ம் இடம் வகிக்கும் வேதாரண்யத்தில் ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
முழுவீச்சில் உப்பு உற்பத்தி
வேதாரண்யம் பகுதியில் கோடை காலத்தில் இடையிடையே பெய்யும் மழை உப்பு உற்பத்தியை பாதிக்கிறது. கடந்த 2 மாதங்களாக பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி அடிக்கடி தடைபட்டது. தற்போது ஆகஸ்டு மாதம் வந்து விட்டபோதும் வெயிலின் தாக்கம் குறையாமல் நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வேதாரண்யத்தில் கடந்த ஒரு வாரமாக உப்பு உற்பத்தியாளர்கள் முழுவீச்சில் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு உள்ளனர். இரவு, பகலாக உப்பு உற்பத்தி செய்யும் பணியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதுகாப்பு
இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பை சேமித்து வைத்து வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்காக லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதுபோக மீதி உப்பை தார்ப்பாய், பனைமட்டை கொண்டு மூடி வைத்து பாதுகாத்து வருகின்றனர்.
வெயிலின் தாக்கம் கடந்த ஒரு வாரமாக அதிகமாக உள்ளதால் உப்பு உற்பத்தி மும்முரமாக நடந்து வருவதாக உற்பத்தியாளர்கள் கூறுகிறார்கள். உப்பள பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. முழு வீச்சில் உப்பு உற்பத்தி நடைபெறுவதால் ஆண்டு உற்பத்தி இலக்கு விரைவில் எட்டப்படும் என்றும் கூறப்படுகிறது.