வேதாரண்யத்தில், மீனவர்கள் வலையில் அதிக அளவில் சிக்கும் நீலக்கால் நண்டுகள்
வேதாரண்யத்தில், மீனவர்கள் வலையில் அதிக அளவில் சிக்கும் நீலக்கால் நண்டுகள்
வேதாரண்யத்தில் மீனவர்கள் வலையில் அதிக அளவில் சிக்கும் நீலக்கால் நண்டுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மீன்பிடி சீசன்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையில் மீன்பிடி சீசன் தொடங்கி உள்ளது. நாகை, தஞ்சை, காரைக்கால், ராமேஸ்வரம், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்ட மீனவர்கள் வரும் மார்ச் மாதம் வரை உள்ள சீசனையொட்டி தொழில் செய்ய படகுகள் மற்றும் குடும்பத்துடன் வர தொடங்கி உள்ளனர். தற்போது வெளியூர் மீனவர்களுடன் உள்ளுர் மீனவர்களும் மீன்பிடிதொழிலுக்கு செல்கின்றனர். மீனவர்கள் வலையில் மட்லீஸ்மீன், காலா, ஷீலா, வாவல், திருக்கை மற்றும் சிறிய வகை மீன்களான தோளி, வெள்ளம், தோகை பொடி, பன்னா உள்ளிட்ட பல்வேறு வகை மீன்களும், நீலக்கால் நண்டு, புள்ளிநண்டு, கல்நண்டு, சிலுவை நண்டு மற்றும் இறால் வகைகளும் கிடைக்கிறது. நாள் ஒன்றுக்கு 2 முதல் 5 டன் வரை மீன்கள், இறால், நண்டுகள் கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலக்கால் நண்டுகள்
தற்போது மீனவர்கள் வலையில் அதிக அளவில் நீலக்கால் நண்டு, புள்ளி நண்டு, சிலுவை நண்டு கிடைக்கிறது. இதில் நீலக்கால் நண்டுகள் கோடியக்கரை கடல் பகுதியிலேயே வைத்து அவிக்கப்பட்டு அமெரிக்காவிற்கு ஐஸ்கீரிம் செய்ய அனுப்பி வைக்கப்படுகிறது.
இதுகுறித்து கோடியக்கரை மீனவநல சங்க முன்னாள் செயலாளர் சித்திரவேல் கூறியதாவது:-
கொரோனாவுக்கு பிறகு கோடியக்கரையில் தற்போது மீன்பிடி சீசன் கலை கட்ட தொடங்கி உள்ளது. வழக்கமாக அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இங்கு மீன்பிடி சீசன் காலமாகும். இந்த 6 மாத காலத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் தங்கள் படகுகளுடன் இங்கு வந்து தங்கி மீன்பிடி தொழிலை செய்வார்கள்.
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி
தற்போது நீலக்கால் நண்டு அதிக அளவில் கிடைப்பதால் அதை கடற்கரையிலேயே அவித்து ஐஸ்கீரிம் செய்வதற்கு அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கும், வெளி மாவட்டத்திற்கும் நீலக்கால் நண்டு அனுப்பிவைத்தாலும் சரியான விலை கிடைக்கவில்லை. முன்பு கிலோ 700 ரூபாய்க்கு விலைபோன நீலக்கால் நண்டு தற்போது 300 ரூபாய்க்கு விலை போகிறது. இதற்கு காரணம் கோடியக்கரையில் கிடைக்கும் நீலக்கால் நண்டு தற்போது இந்தோனேசியா நாட்டிலும் அதிக அளவில் கிடைக்கிறது. இங்கு விற்பனையாவதை விட இந்தோனேசியாவில் பல மடங்கு விலை குறைவாக உள்ளதால் அங்கிருந்து பல நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த விலை வீழ்ச்சி ஒரிரு வாரத்தில் சரியாகும். அதன் பிறகு கோடியக்கரையில் இருந்து பெரும் அளவில் நண்டுகள் ஏற்றுமதியாகும் என்றார்.