வேதாரண்யத்தில், மீன்கள் விலை கடும் உயர்வு
மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதையடுத்து வேதாரண்யத்தில் மீன்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
வேதாரண்யம்:
மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதையடுத்து வேதாரண்யத்தில் மீன்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
மீன்பிடி தடைக்காலம்
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையில் விசைப்படகுகள் கரையோரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன் மகாதேவி, கோடியக்கரை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் இருந்து நாள்தோறும் குறைந்த அளவிலான பைபர் படகுகள் கடலில் குறைந்த தூரம் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பைபர் படகில் சென்ற மீனவர்களின் வலையில் வாவல், காலா, பண்ணா, கானாங்கெளுத்தி, மத்தி, நண்டு, இறால் உள்ளிட்ட மீன்கள் குறைந்த அளவிலேயே கிடைத்தன.
விலை உயர்வு
மேலும் மீன்பிடி தடைக்காலம் என்பதால் இந்த மீன்களுக்கு நல்ல விலையும் கிடைக்கின்றன. அந்த வகையில் காலா ரூ.700-க்கும், பெரியஇறால் ரூ.400-க்கும், சின்னஇறால் ரூ.300-க்கும், நீலக்கால் நண்டு ரூ.700-க்கும், 3புள்ளி நண்டு ரூ.400-க்கும், மத்தி மற்றும் சிறுவகை மீன்கள் 1 கிலோ ரூ.200-க்கும் விற்பனையானது. ஆனால் தற்போது அனைத்து வகை மீன்களும் கடுமையாக விலை உயர்ந்துள்ளது. அதேநேரம் மீன்கள் விலை உயர்வால், கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது.