தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

Update: 2023-06-16 18:45 GMT

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் நேற்று காலையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

மீன்பிடி தடைக்காலம்

மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது.

இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம், வேம்பார், தருவைகுளம் ஆகிய இடங்களில் உள்ள சுமார் 545 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. மீனவர்கள் தங்கள் படகுகளை சீரமைத்தல், வலைகளை சரிசெய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனர். இந்த தடைக்காலம் கடந்த 14-ந் தேதியுடன் முடிவடைந்தது.

கடலுக்கு சென்றனர்

இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதற்காக ஆயத்தமானார்கள். அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தையும் செய்தனர். இந்த நிலையில் மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், எனவே, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் மீனவர்களுக்கு மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதனால் தடைக்காலம் முடிந்தும் முதல் நாளான நேற்று முன்தினம் படகுகள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீனவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் பலத்த காற்று எச்சரிக்கை விலக்கி கொள்ளப்படாத நிலையிலும் நேற்று அதிகாலையில் அனைத்து விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

அதிகாரிகள் ஆலோசனை

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 247 விசைப்படகுகள் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்