தூத்துக்குடியில்ஊர்க்காவல் படையினருக்கான விளையாட்டு போட்டி

தூத்துக்குடியில் ஊர்க்காவல் படையினருக்கான விளையாட்டு போட்டி நடந்தது.

Update: 2023-04-20 18:45 GMT

தூத்துக்குடியில் ஊர்க்காவல்படையினருக்கான விளையாட்டு போட்டிகளை நேற்று ேபாலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தொடங்கி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

விளையாட்டு போட்டி

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நெல்லை சரகத்துக்கு உட்பட்ட தூத்துக்குடி, நெல்லை மாவட்டம், நெல்லை மாநகரம், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த ஊர்காவல் படையினருக்கான 28-வது நெல்லை சரக அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தன. போட்டியை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து ஓட்டப்பந்தயம், குண்டுஎறிதல், கபடி, நீளம் தாண்டுதல் போன்ற பல்வேறு போட்டிகள் நடந்தன. இதில் நெல்லை சரகத்துக்கு உட்பட்ட ஏராளமான ஊர்க்காவல் படை வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர். மாலையில் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனைமுருகன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நெல்லை சரக ஊர்காவல் படை துணை தளபதி பிரகாஷ் குமார், தூத்துக்குடி ஊர்க்காவல் படை வட்டார தளபதி பாலமுருகன், துணை வட்டார தளபதி கவுசல்யா மற்றும் ஊர்காவல் படையினர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்