தூத்துக்குடியில் வணிகர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற சிறப்பு மேளா
தூத்துக்குடியில் வணிகர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற சிறப்பு மேளா செவ்வாய்க்கிழமை நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற சிறப்பு மேளா நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
உணவு பாதுகாப்பு
அரசு மற்றும் தனியார் வசம் உள்ள உணவுப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள், சேமிப்பு கிட்டங்கிகள், சில்லறை விற்பனையாளர்கள், ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்டுகள், உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பொருட்களை விற்கும் மருந்தகங்கள், தெருவோர வணிகர்கள், விழாக்கால விற்பனையாளர்கள், சி.எப்.எஸ், லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் போக்குவரத்தாளர்கள், உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஆகிய அனைத்து வகை உணவு வணிகர்களும், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தின் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெறுவது அவசியமாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் 15 சதவீத உணவுப் பொருட்கள் சம்பந்தப்பட்ட வணிகர்கள் உரிமம் பெறவில்லை என்று தெரியவந்து ள்ளது.
உரிமம் மேளா
எனவே, உணவு வணிகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு, ஒரு வாய்ப்பாக, "உணவு பாதுகாப்பு உரிமம் மேளா" நடத்த உணவு பாதுகாப்புத் துறையால் திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி இந்த மேளா நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தூத்துக்குடி தெற்கு ராஜா தெருவில் உள்ள அகில இந்திய வர்த்தக தொழிற்சங்க அலுவலக அரங்கில் நடக்கிறது.
முகாமில் உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதிழ் பெறாத வணிகர்கள் கலந்துகொண்டு பயனடையலாம். 1.12.2022 முதல் உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெறாத வணிகர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இது குறித்து மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலகத்தை நேரிலோ அல்லது 0461-2900669 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.