தூத்துக்குடியில் பள்ளி பஸ்சில் `திடீர்' புகையால் மாணவிகளுக்கு மூச்சுத்திணறல்
தூத்துக்குடியில் பள்ளி பஸ்சில் `திடீர்' புகையால் மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
தூத்துக்குடியில் பள்ளிக்கூட பஸ்சில் திடீரென புகை வந்ததால் மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதில் 2 மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
பள்ளிக்கூட பஸ்
தூத்துக்குடியில் உள்ள விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவிகள் அதிக அளவில் படித்து வருகின்றனர். இந்த மாணவிகளை பள்ளி வாகனம் மூலம் தினமும் பள்ளிக்கூடத்துக்கு அழைத்து செல்வது வழக்கம்.
இதேபோல் நேற்று காலையில் குளத்தூர், தருவைகுளம், தாளமுத்துநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 35 மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கூட பஸ் வந்து கொண்டு இருந்தது.
திடீர் புகை
இந்த பஸ், பூபாலராயர்புரம் அருகே வந்தபோது, திடீரென பஸ்சின் என்ஜின் பகுதியில் இருந்து புகை கிளம்பியது. இந்த புகை அதிகமானதால், பஸ்சின் உள்புறமும் புகை மூட்டம் பரவியது. இதனால் பஸ்சில் இருந்த மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதில் 2 மாணவிகளுக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உடனடியாக டிரைவர் ரோட்டோரத்தில் பஸ்சை நிறுத்தினார். இதை பார்த்து அங்கு திரண்ட பொதுமக்கள் உதவியுடன் பஸ்சில் இருந்த அனைத்து மாணவிகளும் கீழே இறக்கி விடப்பட்டனர்.
முதலுதவி சிகிச்சை
பாதிக்கப்பட்ட 2 மாணவிகளுக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பொதுமக்கள் பஸ்சில் புகை வந்த பகுதியில் தண்ணீரை ஊற்றி தீப்பிடிக்காமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். இதுபற்றி பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், பள்ளி நிர்வாகம், மாற்று வாகனம் மூலம் அனைத்து மாணவிகளையும் பள்ளிக்கூடத்துக்கு அழைத்து சென்றது.
திடீரென புகை வந்தவுடன் டிரைவர் பஸ்சை நிறுத்தியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.