தூத்துக்குடியில் வங்கி கணக்கில் இருந்து மோசடியாக எடுக்கப்பட்ட ரூ.5 லட்சம் மீட்பு

தூத்துக்குடியில் வங்கி கணக்கில் இருந்து மோசடியாக எடுக்கப்பட்ட ரூ.5 லட்சத்தை சைபர் குற்றப்பிரிவு போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.

Update: 2022-10-17 18:45 GMT

தூத்துக்குடி மதுரா கோட்ஸ் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சரவணமுருகன். இவர் தூத்துக்குடி அனல்மின் நிலையத்துக்கு உதிரி பாகங்கள் விநியோகம் செய்து வந்து உள்ளார். அதற்காக அனல்மின் நிலைய கனரா வங்கி கிளையில் நடப்பு கணக்கின் கீழ் லோன் கேட்டு விண்ணப்பித்தார். அதன்படி கடந்த 14.9.2022 அன்று பகலில் 12.19 மணிக்கு அவரது வங்கி கணக்குக்கு லோன் தொகை ரூ.10 லட்சம் கிரெடிட் ஆகி உள்ளது. ஆனால் அன்று மதியம் சரவணமுருகன் வங்கி கணக்கில் இருந்த ரூ.4 லட்சத்து 99 ஆயிரத்து 991 பணத்தை அவரது அனுமதியின்றி யாரோ எடுத்து உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வங்கிக்கு சென்று தனது பணம் எடுக்கப்பட்டு இருப்பது குறித்து கேட்டு உள்ளார். அப்போது மொபைல் பேங்கிங் மூலம் எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளனர். இது குறித்து சரவணமுருகன் தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சைபர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து கனரா வங்கிக்கு விவரங்கள் கேட்டு மின்னஞ்சல் அனுப்பியதன் அடிப்படையில் வங்கியில் இருந்து நடவடிக்கை மேற்கொண்டு, அவரது இழந்த பணம் அவருக்கு தெரியாமல் சென்றுள்ளதால் காப்பீடு மூலமாக இழந்த பணத்தை அவரது வங்கி கணக்குக்கு வங்கியில் இருந்து மீண்டும் வரவு வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், அவரிடம் பணம் வரவு வைக்கப்பட்டதற்கான ஆவணங்களை நேரில் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்