தூத்துக்குடியில்மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் விற்பனை கடையில் தீ விபத்து
தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் விற்பனை கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள்
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சாலாராம் சித்தார்த் (வயது 34). இவர் தூத்துக்குடி டூவிபுரம் 2-வது தெருவில் வசித்து வருகிறார்.
மேலும் தூத்துக்குடி தெற்கு காட்டன் சாலையில் மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் மற்றும் ஆயில் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
தீவிபத்து
3 மாடிகள் கொண்ட இந்த கடையை நேற்று காலையில் வழக்கம் போல் ஊழியர்கள் திறந்த போது, திடீரென கடையின் உள்பக்கத்தில் இருந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்து அவர்கள் உடனடியாக வெளியேறினார்கள்.
தொடர்ந்து கடையில் இருந்த ஆயில் கேன் மற்றும் டயர்கள் மளமளவென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் அந்த பகுதியில் கரும்புகை வெளியேறியது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்
இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு அலுவலர் மனோபிரசன்னா தலைமையில் உதவி அலுவலர்கள் ராஜூ, நட்டார் ஆனந்தி மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
இதையடுத்து தூத்துக்குடியை சேர்ந்த 4 தீயணைப்பு வாகனங்கள், சிப்காட், ஓட்டப்பிடாரத்தில் இருந்து தலா ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
ரூ.25 லட்சம் பொருட்கள்
இந்த தீ விபத்தில் சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடையில் மின்கசிவு காரணமாக தீப்பற்றியதா, வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.