தூத்துக்குடியில்இந்து மக்கள் கட்சியினர் போராட்டம்
தூத்துக்குடியில் இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலின் மாசி கட்டளை சொத்துக்கள் தூத்துக்குடி புதுக்கோட்டை குமாரகிரி பஞ்சாயத்து பகுதியில் உள்ளது. இந்த சொத்துக்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்து பத்திரம் பதிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் மாநில செயலாளர் வசந்தகுமார் தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முயன்றனர். இதற்காக கட்சியினர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அந்த அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஒரு வாரகாலத்துக்குள் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அதன்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.