தூத்துக்குடியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தல்

தூத்துக்குடியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிற 8-ந் தேதி நடக்கிறது

Update: 2022-10-27 18:45 GMT

தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிற 8-ந் தேதி நடக்கிறது.

பஞ்சாயத்து தலைவர்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இதில் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடத்தப்பட்டது. 17 உறுப்பினர்களை கொண்ட மாவட்ட பஞ்சாயத்தில் அ.தி.மு.க. 12 வார்டு உறுப்பினர்களையும், தி.மு.க. 5 வார்டு உறுப்பினர்களையும் பெற்றது. தொடர்ந்து நடந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த 5-வது வார்டு உறுப்பினர் சத்யா தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள், தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, அந்த தீர்மானத்தை நிறைவேற்றினர். இதனை தொடர்ந்து தலைவர் சத்யா பதவியில் நீக்கம் செய்யப்பட்டதாக அறிவித்து அரசிதழில் வெளியிடப்பட்டது.

தேர்தல்

இதனை தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையம் தமிழகத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தலை அறிவித்து உள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண மறைமுக தேர்தல்களின் போதும், அதன்பின்னர் நடந்த சாதாரண, தற்செயல் மறைமுக தேர்தல்களின் போதும் குறைவெண் வரம்பின்மை மற்றும் கோர்ட்டு வழக்கு போன்ற காரணங்களால் தேர்தல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட பதவியிடங்களுக்கும், இறப்பு, பதவி விலகல், பதவி நீக்கம் காரணமாக செப்டம்பர் மாதம் வரை ஏற்பட்டு உள்ள காலி பதவியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற 30-ந் தேதிக்குள் தொடர்புடைய உறுப்பினர்களுக்கு மறைமுக தேர்தலுக்கான தேர்தல் அறிவிப்பு சார்பு செய்ய வேண்டும். வருகிற 8-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிற 8-ந் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்தின் அ.தி.மு.க. தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். தற்போது, அ.தி.மு.க. கவுன்சிலர்களும் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதால், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்ற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்