தூத்துக்குடியில்வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்
தூத்துக்குடியில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் தேர்வு கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரியும் கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
கட்டண உயர்வு
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தேர்வு கட்டணத்தை இளநிலை படிப்புகளுக்கு ஒரு பாடத்துக்கு ரூ.100-ல் இருந்து ரூ.140 ஆகவும், முதுநிலை படிப்புகளுக்கு ஒரு பாடத்துக்கு ரூ.160-ல் இருந்து ரூ.220 ஆகவும் உயர்த்தி உள்ளது. மேலும், புரோவிசனல் சான்றிதழ் கட்டணம், மறுமதிப்பீடு கட்டணம், தடையில்லா சான்று கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் கடுமையாக உயர்த்தி உள்ளது.
போராட்டம்
இதனால் ஏழை, எளிய மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவதாகவும், மன உளைச்சலுக்கு உள்ளாகி படிப்பு தடைபடுவதாகவும், கட்டண உயர்வை பல்கலைக்கழகம் திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் தூத்துக்குடியில் உள்ள கல்லூரிகளில் நேற்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடந்தது.
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமை தாங்கினார்.
மறவன்மடம்
இதே போன்று மறவன்மடம் பிஷப் கால்டுவெல் கல்லூரியில் இந்திய மாணவர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் சதிஷ் தலைமையிலும், தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சங்கத்தின் நிர்வாகிகள் கவுதம், சுலேராஜ், நேசமணி ஆகியோர் தலைமையிலும் மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். மேலும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையென்றால், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை திரட்டி பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று இந்திய மாணவர் சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.