தூத்துக்குடியில் சி.ஐ.டி.யு. சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் சி.ஐ.டி.யு. சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-11-24 18:45 GMT

தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலி ரூ.750 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி சி.ஐ.டி.யு. ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தினர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் வே.கருப்பசாமி தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாநகராட்சி கிளை செயலாளர் ராமமூர்த்தி பேசினார்.

மாவட்ட செயலாளர் டி.முனியசாமி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் இரா.பேச்சிமுத்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் கே.காசி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநகர செயலாளர் டி.ராஜா, மாநகராட்சி கவுன்சிலர் முத்துமாரி, உப்பளத் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் கே.சங்கரன் உள்ளிட்டோர் பேசினர். சி.ஐ.டி.யு மாநில செயலாளர் ஆர்.ரசல் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார்.

கோரிக்கைகள்

ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், ஓட்டுனர்கள் உள்ளிட்டவர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலி ரூ.750 வழங்க வேண்டும். தொகுப்பூதியம் மற்றும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.16,725- ல், 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் 89 ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். 8 மணி நேர வேலை முறையை அமல்படுத்த வேண்டும். வேலைப்பளுவை திணிக்கக் கூடாது. ஒப்பந்தப் பணியாளர்களிடம் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் 2021 மற்றும் மார்ச், செப்டம்பர் 2022 என 5 முறை பிடித்தம் செய்த தொழில் வரிக்கு ரசீது வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய பணப்பலன்களை அலைக்கழிக்காமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்