தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 8 பேர் கைது
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் தொடர்புடைய ஜெயில் வார்டனை போலீசார் தேடிவருகின்றனர்
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர். ஜெயில் வார்டனை போலீசார் தேடி வருகின்றனர்.
கஞ்சா விற்பனை
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் தூத்துக்குடி வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரபி சுஜின்ஜோஸ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது 1-வது ரெயில்வே கேட் அருகே சந்தேகப்படும்படியாக 7 பேர் நின்று கொண்டு இருந்தனர். அவர்களை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது, அவர்கள் தப்பி செல்ல முயன்றனர். போலீசார் விரைந்து செயல்பட்டு தூத்துக்குடி வடக்குராஜா தெருவைச் சேர்ந்த கென்னடி மகன் சிம்சன் (26), தூத்துக்குடி சக்தி நகரைச் சேர்ந்த தங்கமாரியப்பன் மகன் பலவேசம் என்ற செல்வம் (27), தூத்துக்குடி 3-செண்ட் அந்தோனியார்புரத்தைச் சேர்ந்த சண்முகவேல் மகன் மீரான் என்ற மூர்த்தி (21) மற்றும் 19 வயது வாலிபர் உள்பட 4 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து 3½ கிலோ கஞ்சா, ரூ.13 ஆயிரத்து 750 ரொக்கப்பணம், ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்து தப்பி சென்ற பாளையங்கோட்டையில் ஜெயில் வார்டனாக பணியாற்றி வரும் அஜித் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மற்றொரு வழக்கு
இதே போன்று தூத்துக்குடி அமெரிக்கன் ஆஸ்பத்திரி சந்திப்பு அருகே கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்ததாகதூத்துக்குடி வடக்குராஜா தெருவைச் சேர்ந்த கென்னடி மகன் சுதர்சன் (28), மணப்பாடு வேளாங்கன்னி மாதாதெருவைச் சேர்ந்த ஓடிலோ மகன் சந்தோஷ் (41), தூத்துக்குடி தேவர்காலனியைச் சேர்ந்த சந்தனபாண்டியன் மகன் அய்யாத்துரை என்ற சுரேஷ் (33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 3 கிலோ 300 கிராம் கஞ்சா, ரூ.13 ஆயிரத்து 750 ரொக்கப்பணம், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹென்சன் பவுல்ராஜ், தனிப்பிரிவு போலீசார் கலைவாணர், பொன்பாண்டியன் ஆகியோர் எட்டயபுரம் ரோட்டில் கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்ததாக தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பூபாண்டியபுரத்தைச் சேர்ந்த வசமுத்து மகன் முனியசாமி (23) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 275 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் நேற்று முன்தினம் ஒரே நாளில் கஞ்சா விற்ற 8 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.