தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் சிக்கினர்
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் சிக்கினர்
தூத்துக்குடி லெவஞ்சிபுரம் பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த 2 வாலிபர்களை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர்.
போலீசார் ரோந்து
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி துணை சூப்பிரண்டு சத்தியராஜ் மேற்பார்வையில் தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லெவிஞ்சிபுரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
கஞ்சா விற்பனை
விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி சிதம்பரநகர் சிவசுப்பிரமணியன் மகன் சதீஷ் என்ற மோசஸ் (வயது 23), தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் கல்யாணி மகன் அலெக்ஸ் (21) ஆகியோர் என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் அந்த பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்று வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ், அலெக்ஸ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 50 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
வழக்குகள் நிலுவை
மேலும் தென்பாகம் போலீசார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட சதீஷ் மீது ஏற்கனவே தென்பாகம் போலீஸ் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும், சிப்காட் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. அதுபோல் அலெக்ஸ் மீது தென்பாகம் போலீஸ் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகளும், தெர்மல்நகர் போலீஸ் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.