தூத்துக்குடி முருகேசன் நகரில் ரூ.10½ லட்சத்தில் புதிய பயணியர் நிழற்குடை
தூத்துக்குடி முருகேசன் நகரில் ரூ.10½ லட்சத்தில் புதிய பயணியர் நிழற்குடையை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.
நிழற்குடை
தூத்துக்குடி-மடத்தூர் ரோட்டில் உள்ள முருகேசன்நகர் பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதனால் மழை, வெயில் நேரங்களில் பயணிகள் ரோட்டோரம் நிற்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10½ லட்சம் செலவில் முருகேசன் நகர் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.
இதன் திறப்பு விழா நேற்று மதியம் நடந்தது. விழாவுக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கி புதிய பயணியர் நிழற்குடையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
நலத்திட்ட உதவி
இதனை தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவுக்கு அமைச்சர் தலைமை தாங்கி, அங்கன்வாடி குழந்தைகளுக்கு புத்தாடைகள், விளையாட்டு பொருட்கள், ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி, சேலை மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 50 சேர்கள் ஆகியவற்றை வழங்கி பேசினார்.
அப்போது, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மக்களுக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தார். அவரது ஆட்சியில்தான் கம்ப்யூட்டர் கல்வி வளர்ச்சி பெற்றது. டைடல் பார்க் போன்றவற்றை கொண்டு வந்து கம்ப்யூட்டர் உலகில் சிறந்த வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார். அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நூற்றாண்டு விழாவில் ஒவ்வொரு மக்களும் பயன்பெறும் வகையில் விழாக்களை நடத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன' என்று கூறினார். விழாவில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.