தூத்துக்குடியில், வெள்ளிக்கிழமைநெய்தல் கலைத்திருவிழா தொடங்குகிறது

தூத்துக்குடியில், வெள்ளிக்கிழமை நெய்தல் கலைத்திருவிழா தொடங்குகிறது

Update: 2023-04-27 18:45 GMT

தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. ஏற்பாட்டில் நெய்தல் கலைத்திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்த விழா நடைபெறும் இடத்திற்கு பஸ்நிலையங்களில் இருந்து இலவச பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

நெய்தல் கலைத்திருவிழா

தூத்துக்குடியில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. ஏற்பாட்டில் கடந்த ஆண்டு தூத்துக்குடியில் நெய்தல் என்ற பெயரில் பிரமாண்ட கலைத்திருவிழா நடந்தது. மீனவ மக்களின் வாழ்வியலை கலையாக வெளிப்படுத்திய இந்த நிகழ்ச்சி தூத்துக்குடி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதன்படி 2-வது ஆண்டாக நெய்தல் கலை விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கனிமொழி எம்.பி. நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். இந்த விழா தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு, சங்கரப்பேரி விலக்கில் உள்ள திடலில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 1-ந் தேதி வரை நெய்தல் கலைத்திருவிழா கோலாகலமாக நடக்கிறது. இந்த கலைத்திருவிழாவில் 30-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இதில் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டு தங்கள் கலைத்திறமைகளை வெளிப்படுத்துகின்றனர்.

முதல் நாளான இன்று தூத்துக்குடி இசைக் கல்லூரி, கணேஷ்கா சிலம்பப் பயிற்சிப் பள்ளி, சகா கலைக்குழு, காஞ்சி கைச்சிலம்பாட்டக் கலைக்குழு, செவி இசைக்குழு - ஆதிமேளம், தேன்மொழி ராஜேந்திரன் கரகம், நையாண்டி மேளம், ஐந்திணை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கலைத்திருவிழாவில் கலைகள் மட்டுமின்றி, நமது பாரம்பரிய உணவு வகைகளையும் அறிந்துகொள்ளும் வகையில் 40 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.

இலவச பஸ் வசதி

விழாவை முன்னிட்டு பொதுமக்கள் சிரமப்படாமல் விழாவுக்கு வந்து செல்வதற்கு வசதியாக தூத்துக்குடி பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையங்களில் இருந்து இலவசமாக பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது. இதற்காக தனியாக பஸ் நிறுத்தமும் உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால் எட்டயபுரம் ரோட்டில் செல்லும் அனைத்து பஸ்களும், புத்தகத்திருவிழா மற்றும் நெய்தல் கலைத்திருவிழா நடைபெறும் இடத்தின் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்