தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைப்பதற்கு நிதிஉதவி ; கலெக்டர் செந்தில்ராஜ்

தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைப்பதற்கு நிதிஉதவி வழங்கப்படுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-27 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கிறிஸ்தவ ஆலயங்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் சொந்தக் கட்டிடத்தில் இயங்கி வரும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதிஉதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த உதவிகளை பெறுவதற்கு தேவாலயம் பதிவு செய்யப்பட்டு சொந்தக் கட்டிடத்தில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருக்கவேண்டும். தேவாலயம் மற்றும் தேவாலயம் கட்டப்பட்ட இடம் ஆகியவை பதிவுத்துறையில் பதிவு செய்திருத்தல் வேண்டும். தேவாலயத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகள் மற்றும் தேவாலய கட்டிடத்தின் வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு 10-15 வருடம் வரை இருப்பின் ரூ.1 லட்சமும், 15-20 வருடமாக இருப்பின் ரூ.2 லட்சமும், 20 வருடத்துக்கு மேல் இருந்தால் ரூ.3 லட்சமும் நிதியுதவி வழங்கப்படும். தேவாலயத்தில் சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதிஉதவியும் பெற்றிருத்தல் கூடாது.

ஆவணங்கள்

விண்ணப்பத்துடன் தேவாலய கட்டிடத்துக்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து வரைபடம் அனுமதி ஒப்புதல் பெறப்பட்ட ஆணைநகல் மற்றும் தேவாலயம் கட்டப்பட்ட நாள், தேவாலய கட்டிடத்தின் ஸ்திரத்தன்மைசான்று உள்ளாட்சிஅமைப்பு பொறியாளர்களிடம் இருந்து பெறப்பட்டு இருத்தல் அவசியம். தேவாலயம் முகப்புதோற்றம் மற்றும் பழுதுஏற்பட்டுள்ள பகுதியின் புகைப்படங்கள், தேவாலயம் சுயாதீனம் வகையாக இருந்தால், அதன் செயல்பாடுகள் குறித்து உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து பெற்ற சான்று இணைத்தல் வேண்டும். தேவாலயம் வங்கி கணக்குஎண், வங்கியின் பெயர், கிளை விவரம் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

விண்ணப்பப்படிவம் மற்றும் சான்றிதழ் www.bcmbcmw@tn.gov.inஎன்ற இணையதள முகவயில் வெளியிடப்பட்டு உள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்துடன் உரிய பிற்சேர்க்கை படிவத்தையும் பூர்த்தி செய்து உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களோடு மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்