தூத்துக்குடி மாவட்டத்தில் 5¼ லட்சம் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 5¼ லட்சம் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்பட உள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்

Update: 2023-01-09 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் 5¼ லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்பட உள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பரிசு தொகுப்பு

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1000, ஒருகிலோ பச்சரிசி, ஒரு கிலோ சீனி, ஒரு முழு கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்பேரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் வீடு, வீடாக வினியோகம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் தொடங்கியது. தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட போல்பேட்டை ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து வேளாண்மைத்துறை சார்பில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம் மூலம் ஊட்டமிகு சிறுதானியங்கள் திட்ட விளக்க பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதே போன்று நெல் அறுவடை முடிந்த பிறகு பயறு வகை பயிர் சாகுபடி செய்வதற்காக மானிய விலையில் ஏக்கருக்கு 8 கிலோ உளுந்து விதைகள் வழங்கப்பட்டது.

வாழ்வாதாரம்

விழாவில் கலெக்டர் செந்தில்ராஜ் பேசும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 960 ரேஷன் கடைகள் மூலம் 5 லட்சத்து 23 ஆயிரத்து 894 ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. ரேஷன்கடைகளில் அடுத்த 4 நாட்கள் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும். நாட்டில் முதன்முதலாக தமிழ்நாட்டில்தான் பள்ளிக்கூடங்களில் மதிய உணவுத்திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய பகுதிகளில் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் விரைவில் இந்த திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவித்து உள்ளார்.

இதே போன்று பெண்கள் சுயமாக வேலை செய்து முன்னேற வேண்டும் என்பதற்காக மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன், திறன்பயிற்சி, பெண்களுக்கு இலவச பஸ் பயணத்திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசின் திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவமுத்துக்குமாரசாமி, மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் சிவகாமி, வேளாண்மை துறை இணை இயக்குநர் பழனிவேலாயுதம், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நாச்சியார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்