தூத்துக்குடியில் 1 கிலோ நகை மாயமான வழக்கில் நிதி நிறுவன மேலாளர் கைது
தூத்துக்குடியில் 1 கிலோ நகை மாயமான வழக்கில் நிதி நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டார்.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி நிதி நிறுவனத்தில் 1 கிலோ நகை மாயமான வழக்கில் நிதி நிறுவன மேலாளரை கைது செய்த போலீசார் 80 பவுன் நகைகளை மீட்டனர்.
1 கிலோ நகைகள் மோசடி
தூத்துக்குடி ஸ்பிக் நகரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு சேர்வைக்காரன்மடத்தைச் சேர்ந்த அருள் ஞானகணேஷ் (வயது 48) மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிதி நிறுவனத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில், சுமார் 1 கிலோ தங்க நகைகள் மாயமாகி இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து கிளை மேலாளர் அருள் ஞானகணேஷிடம் விசாரணை நடத்தியதில், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார். தொடர்ந்து அவர் தலைமறைவாகி விட்டார். இதுதொடர்பாக நிறுவனத்தின் சிறப்பு இயக்குனர் ராகவேந்திரன் அளித்த புகாரின்பேரில், முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
80 பவுன் நகை மீட்பு
விசாரணையில், அருள் ஞானகணேஷ் நகைகளை கையாடல் செய்து, தூத்துக்குடியில் உள்ள மற்றொரு நிதி நிறுவனத்தில் அடகு வைத்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், 80 பவுன் நகைகளை மீட்டனர்.
தூத்துக்குடி தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்த நகைகளை மேலாளரே கையாடல் செய்து, மற்றொரு நிதி நிறுவனத்தில் அடகு வைத்து முறைகேட்டில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.