தூத்துக்குடி பகுதியில்கோடை உழவு செய்து மண் வளத்தை பாதுகாக்கலாம்

தூத்துக்குடி பகுதியில் கோடை உழவு செய்து மண் வளத்தை பாதுகாக்கலாம்

Update: 2023-05-12 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை உழவு செய்து மண் வளத்தை பாதுகாக்கலாம் என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சொ.பழனிவேலாயுதம் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கோடை உழவு

தூத்துக்குடி மாவட்டத்தில் கோடைமழை பெய்கிறது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு மேற்கொள்ளலாம். கோடை உழவு செய்யும் போது வெப்பம், குளுமை இரண்டும் மண்ணுக்கு கிடைக்கும். இப்படி இரண்டும் கிடைக்கும் போது தான் மண்ணின் கட்டுமானம் பலப்படும். எனவே மழைக்காலத்தில் செய்யும் உழவைவிட, கோடைகாலத்தில் செய்யும் உழவுதான் மானாவாரி பயிர்களுக்கு முக்கியமானது. கோடை உழவு சட்டிகலப்பை கொண்டு நிலத்தின் குறுக்கே, மேட்டிலிருந்து தாழ்வான பகுதி நோக்கி குறுக்கு வசத்தில் உழ வேண்டும். இவ்வாறு குறுக்கு உழவு செய்யாமல் நேர்கோடாக உழவுசெய்தால் மேட்டிலிருந்து தாழ்வான பகுதிக்கு மண்ணரிப்பு ஏற்படும். குறுக்கு வசத்தில் உழவு செய்தால் மட்டுமே சத்துக்கள் ஆங்காங்கே தடுக்கப்பட்டு மழைநீரும் பூமிக்குள் இறங்கும். அதன் மூலம் மண்ணில் ஈரப்பதம் தக்கவைக்கும் திறன் அதிகரித்து பயிர்கள் நன்கு செழித்து வளர உதவுகிறது.

பெரும்பாலும் மானாவாரி நிலங்களில், மண் மிகவும் கடினமாக இருக்கும். கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணின் இறுக்கம் குறைகிறது. மண்ணை புழுதிபட உழுவதால் மண்ணின் தன்மை மாறுபடுகிறது. மண்ணை துகள்களாக மாற்றுவதால், மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கிறது. மண்ணில் காற்றோட்டம் அதிகரிப்பதால், மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் நன்கு வளர்ச்சி அடைகிறது. இதனால் நிலத்தில் உள்ள செடிகள், கழிவுகள் நன்கு மக்கி உரமாக மாற்றப்படுகிறது. ஒரு வயலில் தொடர்ந்து ஐந்துஆண்டுகள் ஆழமாக கோடைஉழவு செய்தால், அந்த நிலத்தில் மண்புழுக்கள் எண்ணிக்கை அதிகமாகும். மேலும், களைக்கொல்லி மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளின் வீரியம் வெகுவாக குறைந்து மண்ணின் விஷத்தன்மை குறைகிறது.

அவசியம்

கோடை உழவு நீரை நிலத்தில் தக்கவைக்கும். கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணில் மறைந்திருக்கும் தீமை செய்யும் பூச்சிகளின் முட்டைகள், கூண்டுப்புழுக்கள் போன்றவற்றையும் எளிதில் அழித்து விடலாம். அத்துடன் மண்வளத்தை பாதிக்கும் களைச்செடிகள் மற்றும் அதன் விதைகளையும் அழித்து விடலாம். மழைநீரானது வளிமண்டலத்தில் நிறைந்துள்ள நைட்ரேட் என்ற வேதிப்பொருளுடன் இணைந்து மண்ணில் உள்ள தழைச்சத்தை அதிகரிக்கச் செய்யும். விளைநிலத்தின் மேல்மண் வளத்தை பாதுகாக்க கோடைஉழவு அவசியமாகும். எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் கோடை உழவு செய்து நிலத்தை மேம்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்