திருவாரூரில், சுட்டெரிக்கும் வெயில்

அக்னி நட்சத்திரம் முடிந்தும், திருவாரூரில் வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

Update: 2023-05-31 18:45 GMT


அக்னி நட்சத்திரம் முடிந்தும், திருவாரூரில் வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

அக்னி நட்சத்திரம்

கோடை காலம் தொடங்கியது முதல் திருவாரூரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இடையில் அவ்வப்போது மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்த மழையால் வெப்பம் தணிந்திருந்தது. இதற்கிடையே கோடை காலத்தில் உச்சக்கட்ட வெயில் நிலவும் அக்னி நட்சத்திரம் கடந்த மாதம் (மே) 4-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் மழையும் பெய்ததால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்்தனர். இந்த நிலையில் அக்னிநட்சத்திரம் வெயில் தனது உக்கிரத்தை காட்ட தொடங்கியது.

சுட்டெரிக்கும் வெயில்

அதன்படி தொடா்ந்து வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது. தமிழகத்தில் பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. திருவாரூர் மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த வெயில் கொடுமையால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனர்.

கடந்த 29-ந் தேதியுடன் அக்னி நட்சத்திரம் நிறைவு பெற்றது. அக்னி நட்சத்திரம் நிறைவு பெற்றாலும் திருவாரூரில் அதன் தாக்கம் சற்றும் குறையவில்லை. தொடர்ந்து வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் சாலையில் செல்பவர்கள் குடை பிடித்து கொண்டும், முகத்தில் துணியை மூடி கொண்டும் சென்றதை காணமுடிந்தது.

தண்ணீர் சத்துள்ள பழங்கள்

வீடுகளிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. இரவு நேரங்களில் மின்விசிறியில் இருந்து வரும் காற்றும் அனல்காற்றாகவே வருகிறது. திருவாரூரில் நேற்றும் வெயில் அதிகமாக காணப்பட்டது. திருவாரூரில் நேற்று 98 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வெயிலின் தாக்கம் காரணமாக போக்குவரத்து போலீசாரும் பெரும் அவதியடைந்தனர்.

வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள சாலையோரங்களில் உள்ள பதநீர் கடைகள், நுங்கு, வெள்ளரிப்பிஞ்சு, தர்ப்பூசணி, கிர்ணி பழங்கள், கம்பங்கூழ், கேழ்வரகு கூழ், கரும்பு ஜூஸ் போன்ற கடைகளை பொதுமக்கள் நாடுகின்றனர். மேலும் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் சார்பில் தண்ணீர் பந்தல், நீர்மோர், ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்