திருவாரூரில், நாளை முதல் தொடர் காத்திருப்பு போராட்டம்

திருவாரூரில், நாளை முதல் தொடர் காத்திருப்பு போராட்டம்

Update: 2023-04-23 18:45 GMT

பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கக்கோரி திருவாரூரில் நாளை(செவ்வாய்க்கிழமை) முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என அங்கன்வாடி ஊழியர் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்-உதவியாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தவமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரேமா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொறுப்பாளர்கள் சித்ரா, மாலதி, திரிபுரசுந்தரி மற்றும் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முருகையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து கால முறை ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ. 26 ஆயிரமும், ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரமும் வழங்க வேண்டும்.

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்

மருத்துவ காப்பீடு தொகை மருத்துவ செலவுகளுக்கு ஏற்ப முழுமையாக வழங்க வேண்டும். அங்கன்வாடி மைய பராமரிப்புக்காக வழங்கப்படும் ரூ.3 ஆயிரம் தொகையினை பணியாளர்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும். சிலிண்டர் மற்றும் உணவு செலவுகளுக்கான தொகையை முன்பணமாக வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களுக்கான மின்கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

தொடர் காத்திருப்பு போராட்டம்

கோடை வெயிலின் தாக்கம் கருதி அங்கன்வாடிகளுக்கு உடனடியாக விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை காலத்தில் உலர் உணவு பொருட்களாக வழங்க வேண்டும். மகப்பேறு விடுப்பு காலத்தை ஒரு வருடமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும். பணியிட மாறுதல் அளித்திட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் திருவாரூரில் கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  

Tags:    

மேலும் செய்திகள்