திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் வியாபாரிகள் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்படுமா?

உழவர் சந்தைகளில் விவசாயிகள் என்ற போர்வையில் வியாபாரிகள் காய்கறி விற்பனை செய்வதை கட்டுப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-10-25 18:45 GMT

உழவர் சந்தைகளில் விவசாயிகள் என்ற போர்வையில் வியாபாரிகள் காய்கறி விற்பனை செய்வதை கட்டுப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உழவர் சந்தைகள்

விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு உரிய விலை கிடைக்காமல் அவதி அடைந்து வந்த சமயத்தில் "விளைய வைப்பதும் உழவரே, விலையை வைப்பதும் உழவரே" என்ற உன்னத நோக்கில் காய்கறி, பழங்களை பயிரிடும் விவசாயிகளின் விளை பொருட்களை இடைத் தரகர்கள் யாருமின்றி நேரடியாக சந்தைப்படுத்துவதற்காக கடந்த 1999-ம் ஆண்டில் தமிழக முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதியால் 'உழவர் சந்தை' என்ற திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, தாமரை நகர், செங்கம், போளூர், கீழ்பென்னாத்தூர், செய்யாறு, வந்தவாசி, ஆரணி ஆகிய 8 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. உழவர் சந்தைகளில் விவசாயிகளின் பொருட்களுக்கு அரசு அதிகாரிகளால் விலை தீர்மானிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் அவர்கள் சரியான அளவில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதையும் கண்காணித்து வருகின்றனர்.

உழவர் சந்தைகள் காலை 5.30 மணியளவில் தொடங்கப்படுகிறது. இங்கு காய்கறிகள் விற்பனையை மேற்கொள்ள விவசாயிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன.

சராசரியாக 100 டன்

உழவர் சந்தைகளில் விவசாயிகள் தனித்தனியாக அமர்ந்து விளை பொருட்களை விற்பனை செய்ய இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இங்கு கத்தரிக்காய், ெவண்டைக்காய், தக்காளி, அவரை, வாழைக்காய், வாழை இலை, வாழைப்பூ, வாழைப்பழங்கள், தேங்காய், கீரை வகைகள் உள்பட பல்வேறு வகையான காய்கறிகள், பழங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் விற்பனை செய்யப்படுகின்றது. உழவர்சந்தைகளில் நிர்வாக அலுவலர், உதவி அலுவலர் நியமிக்கப்பட்டு உழவர்சந்தையை நிர்வகித்து வருகின்றனர். இவற்றுக்கு அன்றாட விலையை வெளிமார்க்கெட் விலையை அடிப்படையாக வைத்து அதைவிட குறைவான விலையை விவசாயிகளும், பொதுமக்களும் பயனடையும் வகையில் நிர்ணயம் செய்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சந்தைகளிலும் 341 விவசாயிகள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். காய்கறிகள் வாங்குவதற்காக ஒரு நாளுக்கு சராசரியாக 14 ஆயிரத்து 700 பேர் வந்து செல்கின்றனர். தினமும் சராசரியாக 100 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனைக்காக வருகின்றன.

சேமிப்பு கிடங்கு

உழவர் சந்தைகளில் விவசாயிகளின் விளை பொருட்களை சேமித்து வைத்து விற்பனை செய்வதற்காக சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் குளிர் பதன வசதி ஏற்படுத்தப்பட்டு விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளது. இந்த உழவர்சந்தைகள் எந்த நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அவை நிறைவேறி வருகிறதா என்பது குறித்து பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்கப்பட்டது.

திருவண்ணாமலை உழவர் சந்தையில் வியாபாரம் செய்யும் கீழ்பென்னாத்தூரை சேர்ந்த அண்ணாமலை கூறுகையில் இங்கு வியாபாரிகள் தொல்லை கிடையாது. முக்கிய அடிப்படை வசதியான கழிவறை வசதி அரசு ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் சந்தையில் நுழைவு வாயில் பகுதியில் முறையாக குப்பைகள் அகற்றப்படாததால் மழை நேரங்களில் மிகவும் அசுத்தமாக காணப்படுகின்றது. சேமிப்பு கிடங்குகளை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்' என்றார்.

விவசாயிகள் போல் வியாபாரிகள்

ஆரணி நகரில் கோட்டை மைதானம் அருகில் உள்ள உழவர் சந்தையில் 80-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தினமும் தங்களது நிலத்தில் விளைவிக்கும் விளைபொருட்களை விற்பனை செய்கின்றனர். படவேடு, சோமந்தாங்கல், அர்ஜுனாபுரம், சந்தவாசல், மங்களாபுரம், கண்ணமங்கலம், சிறுமூர், அடையபுலம், விண்ணமங்கலம், ராந்தம், தெள்ளுர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விளை பொருட்கள் விற்பனைக்கு வருகிறது. இங்கு தினமும் சராசரியாக 1,500-க்கும் மேற்பட்ட நபர்கள் வந்து காய்கறிகளை வாங்கி பயனடைகின்றனர்.

படவேடு பகுதியை சேர்ந்த விவசாயி அம்பிகா கூறுகையில், அதிகாலை 4 மணி முதல் காலை 9.30 மணி வரை காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் பலரும் தங்களது கடைகளுக்கும், தெருவோர வியாபாரம் செய்யும் வியாபாரிகளும் மொத்தமாக கொள்முதல் செய்து வியாபாரம் செய்கிறார்கள். ஆனால் கோட்டை மைதானத்தை சுற்றிலும் விவசாயிகள் போர்வையில் வியாபாரிகளும் வியாபாரம் செய்கிறார்கள் அவர்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

போளூர் உழவர் சந்தையில் முழுவதுமே விவசாயிகள் விளை பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

சாலையோர வியாபாரிகள்

செய்யாறு பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

செய்யாறு உழவர் சந்தையில் 40 கடைகள் இருந்த போதிலும் பெரும்பாலான கடைகளை பயன்படுத்தாமல் காலியாக வைத்திருக்கின்றனர். ஆரணி கூட்ரோடு முதல் பெரியார் சிலை வரை சாலையின் இரு புறங்களிலும் சாலையோர கடைகள் அதிகரித்து வருவதால் உழவர் சந்தையின் கடைகள் காலியாகவே இருக்கிறது. சாலையோர கடைகளை அகற்றிட நகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கழிவுகளை அகற்ற வேண்டும்

செய்யாறு விவசாயி வெங்கடேசன்:- 'உழவர் சந்தை, விவசாயிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது. தங்களுடைய நிலத்தில் விளையும் பொருட்களை பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்வதால் கூடுதல் லாபம் கிடைக்கிறது' என்றார்.

விவசாயி நடராஜன்:- உழவர் சந்தையில் வியாபாரிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதை தவிர்க்க வேண்டும். உழவர் சந்தையில் ஏற்படும் கழிவுகளை நகராட்சி நிர்வாகம் உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். உழவர் சந்தையில் பயன்பாடற்று கிடக்கும் ஆள்துளை கிணற்றை சரி செய்ய வேண்டும். விவசாயிகள் பயன்படுத்திட கட்டப்பட்டுள்ள கழிப்பறையை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்