திருச்செந்தூரில்சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை கோசாலையில் ஒப்படைக்க வியாபாரிகள் வலியுறுத்தல்

திருச்செந்தூர் நகராட்சியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை நகராட்சி நிர்வாகம் பிடித்து குலசேகரன்பட்டினத்துள்ள கோசாலையில் ஒப்படைக்க வேண்டும் என்று திருச்செந்தூர் அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-12-21 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் நகராட்சியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை நகராட்சி நிர்வாகம் பிடித்து குலசேகரன்பட்டினத்துள்ள கோசாலையில் ஒப்படைக்க வேண்டும் என்று திருச்செந்தூர் அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வியாபாரிகள் சங்ககூட்டம்

திருச்செந்தூரிலுள்ள தனியார் மகாலில் செந்தூர் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் 24-வது ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, சங்க தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் துரைசிங் வரவேற்று பேசினார். துணை தலைவர்கள் சுடலை, ஜான்ராஜ், துணை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தெற்கு மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட செயலாளர் செந்தமிழ்ச்செல்வன், பொருளாளர் பொன்ராஜ், செந்தூர் அனைத்து வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் டாக்டர் வெற்றிவேல், சட்ட ஆலோசகர்கள் ஜெபராஜ், கிரீஷ்குமார் ஆகியோர் வாழ்த்தி வழங்கினர். பின்னர் பொருளாளர் கார்க்கி வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்தார்.

கோசாலையில் அடைக்க...

கூட்டத்தில், திருச்செந்தூர் நகராட்சியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை நகராட்சி நிர்வாகம் பிடித்து குலசேகரன்பட்டினம் கோசாலையில் ஒப்படைக்க வேண்டும். திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் பதிக்கப்பட்டுள்ள தரமற்ற நிலையில் உள்ள சிமெண்டு கற்களை சீரமைக்க வேண்டும். திருச்செந்தூர் - நெல்லை சாலை விரிவாக்கப்பணியை விரைந்து முடிக்க வேண்டும். திருச்செந்தூர் கோவிலில் ரூ.200 கோடியில் திருப்பணி செய்திடும் எச்.சி.எல். நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கோவில் சார்பில் தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க வலியுறுத்துவது, நகராட்சி எல்கையில் டோல்கேட் அமைத்து நகராட்சி நிர்வாகம் வருவாய் ஈட்ட வேண்டும். கிழக்குகடற்கரைச்சாலையினை தூத்துக்குடி- கன்னியாகுமரி வரை உள்ள பணிகள் விரைந்து முடிக்க வேண்டும். திருச்செந்தூர் கடலில் படகு குலாம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள்

மேலும், இந்த பொதுக் குழுவில் புதிய தலைவராக துரைசிங், செயலராக கார்க்கி, பொருளாளாராக ராதாகிருஷ்ணன், துணை செயலாளராக ஜான்பால், சிறப்பு ஆலோசகர்களாக கணேசன், ஆறுமுகம், நிர்வாக குழு உறுப்பினர்களாக முருகன், கேசவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

நிகழ்ச்சிகளை துணை தலைவர் கண்ணன் தொகுத்து வழங்கினார். செயற்குழு உறுப்பினர் பரமேஸ்வரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்