திருச்செந்தூரில் மது கொடுக்காத 2 தொழிலாளிகளுக்கு அரிவாள் வெட்டு
திருச்செந்தூரில் மது கொடுக்காத 2 தொழிலாளிகளை அரிவாளால் வெட்டிய இரண்டு பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் ஓசியாக மது கொடுக்காத 2பேரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்ற 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
தொழிலாளிகள்
திருச்செந்தூர் அருகே நா.முத்தையாபுரம் பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜபாண்டி மகன் ராஜசேகர் (வயது 34). காந்திபுரம் பலவேசம் மகன் சின்னத்துரை (48). தொழிலாளிகள். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் போது, திருச்செந்தூரில் நெல்லை ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிவிட்டு எதிர்புறம் மது குடித்து கொண்டிருந்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த உடன்குடி புதுமனை தெருவை சேர்ந்த சுடலைமணி, கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம், இடலாக்குடி குளத்தூரைச் சேர்ந்த மாதேஷ் ஆகியோர் வந்துள்ளனர்.
ஓசியாக மது கேட்ட...
அங்கு மது குடித்து கொண்டிருந்த ராஜசேகர், சின்னத்துரை ஆகியோரிடம் ஓசியாக மது கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் டாஸ்மாக் கடை மூடிவிட்டது. நாங்கள் ஓசியாக மது தரமுடியாது என்று கூறினார்களாம்.
எங்களுக்கு சரக்கு தராமல் நீங்கள் மட்டும் குடிக்கலாமா? என்று கேட்டு சுடலைமணி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ராஜசேகரையும், சின்னத்துரையையும் தலையில் பலமாக வெட்டியுள்ளார். அப்போது அங்கு தள்ளுவண்டி கடை போட்டிருந்தவர் சத்தம் போட்டவும், சுடலைமணியும், மாதேசும் தப்பியோடி விட்டனர். இதில் பலத்த காயமடைந்த 2 பேருக்கும் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
2 பேருக்கு வலைவீச்சு
இச்சம்பவம் குறித்து ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த 2 பேரையும் தேடிவருகின்றனர்.